ரோம்: இத்தாலியில் கடந்த இருபதாண்டுகளில் சிறார் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களில் ஈடுபட்ட ஏறத்தாழ 60 பாதிரியார்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய ஆயர்கள் மாநாடு புதன்கிழமை (நவம்பர் 25) வெளியிட்ட ஓர் அதிகாரபூர்வ அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிரியார்களின் சிறார் பாலியல் முறைகேடுகளும் அவற்றை மறைக்கும் முயற்சிகளும் பல ஆண்டுகளாக உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையைக் கடுமையாக உலுக்கி வருகின்றன.
இதனால் திருச்சபையின் நம்பகத்தன்மை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இழப்பீட்டுத் தீர்வுகளுக்காகப் பல நூறு மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட நேரிட்டுள்ளது.
பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வெளியான தரவுகளின்படி வெளிவந்த அறிக்கைகள், நீண்டகாலமாகப் பரவலாக நடந்த மதகுருமார்களின் பாலியல் குற்றங்களை வெளிக் கொண்டுவந்தன.
அவற்றுடன் ஒப்பிடுகையில், இப்பிரச்சினையைத் தீவிரமாக எதிர்கொள்ள இத்தாலியத் திருச்சபை தயக்கம் காட்டுவதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2001 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருச்சபை அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்ட 378 வழக்குகளை இப்புதிய அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
அதில் 356 சந்தேகப் பேர்வழிகளும் 385 பாதிக்கப்பட்டோரும் தொடர்புடைய 880 தனித்தனிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டோரில் 123 பேர் குறித்து இத்தாலிய நீதித்துறையிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவர்களில் பாதிப் பேருக்கு, அதாவது 57 பேருக்கு இறுதித் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மேலும், 218 பாதிரியார்கள்மீது திருச்சபை ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததில், ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் குற்றவாளிகள் எனத் தெரியவந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 356 பேரில் 87 பேர் மதகுருப் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர் அல்லது தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்; 39 பேர் பணி ஓய்வுபெற்றுவிட்டனர்; 67 பேர் உயிரிழந்துவிட்டனர்.
பாதிக்கப்பட்டோரில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் ஆண்கள் எனவும் அவர்களில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களே அதிகம் உள்ளனர் எனவும் தெரிவிக்கபட்டது.
ஏறத்தாழ 80 விழுக்காடு வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பலமுறை இக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள். புகாரளிக்கப்பட்ட துன்புறுத்தல்களில் 30 விழுக்காட்டிற்கும் சற்றுக் குறைவானவை நேரடியான பாலியல் செயல்களுடன் தொடர்புடையவை ஆகும். இந்த விரிவான புள்ளிவிவரங்கள் அனைத்தும் இத்தாலிய ஆயர்கள் மாநாட்டின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேவாலயங்களில் பெறப்பட்ட தருவுகளின்படி இது சேகரிக்கப்பட்டது எனவும் முழு அளவிலான சம்பவங்களின் எண்ணிக்கை அதுவல்ல என்றும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் அது இதைவிட அதிக அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்படுவோருக்கு உதவ அவசர அழைப்பு எண்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு இயக்கம், பாலியல் துன்புறுத்தலுக்கான நிரந்தரத் தரவு ஆய்வகம் அமைத்தல் போன்ற பரிந்துரைகள் மாநாட்டில் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
