பாண்டுங்: சிங்கப்பூருக்குப் பச்சிளம் குழந்தைகளைக் கடத்திய கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 12 பேரை இந்தோனீசிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
பெற்றோர் ஒருவர் குழந்தைக் கடத்தல் என்று நம்பப்படும் சம்பவம் தொடர்பில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் பிடித்த சந்தேக நபர் ஒருவர் 24 குழந்தைகளைக் கடத்தியதை ஒப்புக்கொண்டதாக மேற்கு ஜாவா பொதுக் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குநர் சுராவான் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் போர்னியோ தீவில் உள்ள பொன்டியானாக் நகருக்குக் குழந்தைகளைக் கொண்டுசென்று, அங்கிருந்து சிங்கப்பூருக்கு அவற்றை அனுப்பிவைத்ததாக அதிகாரிகள் விளக்கினர்.
“ஆவணங்களின்படி 14 குழந்தைகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டன,” என்றார் திரு சுராவான்.
அந்தக் குழந்தைகளின் வயது ஒன்றுக்கும் குறைவு. மூன்று மாத, ஐந்து மாத, ஆறு மாதக் குழந்தைகளும் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொன்டியானாக்கிலும் டெங்காராங்கிலும் அதிகாரிகள் ஐந்து குழந்தைகளை மீட்டனர். ஜகார்த்தா, பொன்டியானாக், பாண்டுங் ஆகிய நகரங்களிலும் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் சிலரைக் கைதுசெய்தனர்.
“அவர்கள் குழந்தைக் கடத்தல் கும்பல். அவர்கள் ஒவ்வொருவரும் கடத்தலில் ஒவ்வொரு வேலையைச் செய்பவர்களென்று திரு சுராவான் குறிப்பிட்டார்.
சந்தேக நபர்களில் சிலர் குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் வேலையைச் செய்தனர். வேறு சிலர் அவற்றைப் பராமரித்தனர். சிலர் குடும்ப அட்டைகள், கடப்பிதழ்கள் போன்ற குடியுரிமை பதிவு ஆவணங்களைத் தயாரித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கும்பல் 2023ஆம் ஆண்டிலிருந்து செயல்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்றார் திரு சுராவான்.
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளாத பெற்றோர், தாய்மார்களை அடையாளம் கண்டு பணம் கொடுத்து குழந்தைகளைக் கடத்தல் கும்பல் வாங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் புகார் அளித்த பெற்றோர், குழந்தை பிறப்பதற்குமுன் கடத்தல் கும்பலிடம் பணத்துக்காகக் குழந்தையைக் கொடுக்க சம்மதித்திருந்தார்.
கும்பலிடமிருந்து பணம் வராததை அடுத்து அந்தப் பெற்றோர் புகார் அளித்ததாகத் திரு சுராவான் விளக்கினார்.

