சோல்: பிள்ளைகள் குளிக்கும்போது சுத்தம் செய்துகொள்ளப் பயன்படுத்தும் நுரை தெளிப்பான்களால் (Bubble spray) தீ மூளவோ வெடிப்பு ஏற்படவோ அபாயம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுரை தெளிப்பானில் எல்பிஜி (LPG) எனப்படும் எரிவாயு கலந்திருப்பது அதற்குக் காரணம் என வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) வெளியிடப்பட்ட தென்கொரிய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரிய பயனீட்டாளர் அமைப்பு, கொரிய எரிவாயு பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
பிள்ளைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 40 நுரை தெளிப்பான்களைச் சோதித்தபோது அவை அனைத்திலும் எல்பிஜி எரிவாயு கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ஆய்வில் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. கழிவறைகள் போன்ற மூடப்பட்ட சிறிய இடங்களில் எல்பிஜி எரிவாயு, தரைக்கு அருகே சேரலாம். அந்த எரிவாயு, காற்றைவிடக் கனமாக இருப்பது அதற்குக் காரணம்.
அப்படியிருக்கையில் எல்பிஜி மின்சாரத்துடன் தொடர்புகொண்டால் தீ மூளக்கூடும் அல்லது வெடிப்பு ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரை தெளிப்பான்களை தீக்கு அருகிலோ வெப்பம் வெளியிடும் கருவிகளுக்கு அருகிலோ பயன்படுத்த வேண்டாம் என்று பயனீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

