சீனா: ‘பவி’ புயலால் 2 மில்லியன் பேர் வெளியேற்றம்

சீனா: ‘பவி’ புயலால் 2 மில்லியன் பேர் வெளியேற்றம்

தீவிர வெப்பமண்டலப் புயலாக நிலை இறக்கம்
1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்/ Go Nakamura
படம்: இபிஏ

12 Jul 2026 - 7:48 pm

2 mins read

பெய்ஜிங்: சீனாவில் ஒரு வாரகாலத்தில் இரண்டாவது முறையாக வலிமையான புயல் வீசுவதை முன்னிட்டு, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பவி’ புயல், தைசூ நகரில் சனிக்கிழமை (ஜூலை 11) இரவும் வென்சூ நகரில் நள்ளிரவை ஒட்டியும் கரையைக் கடந்தது. தைசூ நகரில் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக ஊடகத் தகவல்கள் கூறின.

முன்னதாக, ஜப்பானியத் தீவுகளைப் பதம் பார்த்த இப்புயல் தைவானுக்கு நகர்ந்தபோது அப்பகுதியில் கனமழை பெய்தது.

இப்புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பிலிப்பீன்சில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.

‘பவி’ புயல் தற்போது கடுமையான வெப்பமண்டலப் புயலாக வலுவிழந்தபோதிலும், அதிக அளவிலான ஈரப்பதம் நிலவுவதால் இன்னும் கடுமையான அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை இப்புயல் ஹங்ஸோ நகரை நோக்கி நகர்ந்ததாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன.

ஜெஜியாங் பகுதியில் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது. அங்குப் பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டதுடன் வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 400 விமானச் சேவைகளும் பல்வேறு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் பெய்ஜிங்கிலும் ஆபத்தைத் தவிர்க்கும் நோக்கில் 100,000 பேருக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலால் சீனாவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.

‘பவி’ புயல் வடமேற்குத் திசையை நோக்கி நகரும்போது படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை முன்னுரைப்பாளர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை தொடரும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வார முற்பகுதியில் சீனாவின் சில பகுதிகளில் ‘மெய்சாக்’ புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டது. அதில் 39 பேர் உயிரிழந்தனர். பேரெண்ணிக்கையில் கால்நடைகள் மாண்டதால் வேளாண் துறைக்கு இழப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்