அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டை சீனா உறுதிப்படுத்தியது

அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டை சீனா உறுதிப்படுத்தியது

2 mins read
bc6f10ba-6f68-4af9-bb1c-eaa77f3561f2
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் கடந்த வாரம் நடத்திய தொலைப்பேசி உரையாடலுக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. - படங்கள்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வர்த்தக உடன்பாடு ஒன்றை சீனா வியாழக்கிழமை (ஜூன் 12) உறுதிப்படுத்தியது.

இருதரப்பும் இந்த இணக்கத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் சீனா அதன் சொல்லை எப்போதும் காப்பாற்றுகிறது என்றும் சீனா கூறியது.

திரு டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் கடந்த வாரம் நடத்திய தொலைப்பேசி உரையாடலுக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் முதற்கட்ட உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களிலேயே முட்டுக்கட்டை நிலவியிருந்தது. இந்நிலையில் டிரம்ப்-ஸி தொலைப்பேசி உரையாடல் அதைத் தகர்த்தெறிந்துள்ளது.

அந்த உரையாடலைத் தொடர்ந்து லண்டனில் கூடுதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பும் பதிலுக்குப் பதில் வரி விதிப்பதை நிறுத்துவதில், ஜெனிவா உடன்பாட்டிற்கு இந்தப் பேச்சுவார்த்தை வலுச்சேர்த்துள்ளதாக அமெரிக்கா கூறியது.

முன்னதாக, கனிம ஏற்றுமதி சீனாவின் தொடர் கட்டுப்பாடுகளால் ஜெனிவா உடன்பாட்டில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இதனால், சீனாவுக்கு பகுதிமின்கடத்தி வடிவமைப்பு மென்பொருள், சீனத் தயாரிப்பு விமானங்களுக்கான இயந்திரங்கள், இதர பொருள்களுக்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்தது.

இந்த வர்த்தக உடன்பாடு குறித்து புதன்கிழமை மகிழ்ச்சி தெரிவித்த திரு டிரம்ப், “சீனா உடனான எங்களது உடன்பாடு நிறைவுற்றுள்ளது. அதிபர் ஸி மற்றும் என் இறுதி ஒப்புதலுக்கு இது உட்பட்டது,” என்று கூறினார்.

“முழு காந்தங்களும் அரியவகை பூமி கனிமங்களும் சீனாவால் முன்கூட்டியே விநியோகிக்கப்படும். அதேபோல, இணக்கம் கண்ட அம்சங்களில் சீனாவுக்கு நாங்கள் வழங்குவோம்,” என்று துரூத் சோஷியல் சமூக ஊடகப் பதிவில் திரு டிரம்ப் கூறினார்.

என்றாலும், அண்மைய உடன்பாட்டின் சரியான விவரங்களும் அது எப்படிச் செயல்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்களும் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்
உடன்பாடுஅமெரிக்காசீனா