ஹாங்காங்: சட்டபூர்வமாக ஓய்வுபெறும் வயதைச் சீனா படிப்படியாக உயர்த்தவுள்ளது. உலகிலேயே ஆகக் குறைவான ஓய்வுபெறும் வயதைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான சீனா, மக்கள் நீண்டநாள் வேலை செய்ய அனுமதி வழங்க இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.
சீனாவில் 1960ல் 44 ஆண்டுகளாக இருந்த ஆயுட்காலம், 2021ல் 78 ஆண்டுகளாகக் கூடியது. அமெரிக்கர்களையும் விஞ்சியுள்ள சீன மக்களின் ஆயுட்காலம், 2050க்குள் 80 ஆண்டுகளைத் தாண்டும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவரும் அதேவேளையில், மக்கள்தொகை மூப்படைந்து வருவதை எதிர்கொள்வதற்கான உத்திகளை மேம்படுத்துவதற்கு ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்ட முக்கியக் கொள்கை ஆவணத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) இந்த அறிவிப்பு வெளியானது.
அந்த ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் 2029க்குள் நிறைவுசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
சீனாவில் ஆண்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. பெரும்பாலான வளர்ச்சியடைந்த பொருளியல்களைவிட இது ஐந்து, ஆறு ஆண்டுகள் குறைவு. அந்நாட்டில் அலுவலகப் பணியில் உள்ள பெண்கள் ஓய்வுபெறும் வயது 55 ஆகவும் தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் ஓய்வுபெறும் வயது 50 ஆகவும் உள்ளது.