கோலாலம்பூர்: சீனாவும் ஆசியான் என்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) மேம்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டில் முதன்முதலில் செய்துகொள்ளப்பட்ட ஆசியான்-சீனா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது.
3.0 என்று அழைக்கப்படும் இந்தப் பதிப்பு மின்னிலக்கம், பசுமைப் பொருளியல், விநியோகச் சங்கிலி இணைப்பு உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியது.
சீனப் பிரதமர் லி சியாங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்னிலையில், ஒப்பந்தத்தில் சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோவும் மலேசியாவின் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் ஜஃப்ருல் அப்துல் அஜீசும் கையெழுத்திட்டனர்.
இது, சீனாவின் முதல் தடையற்ற வர்த்தக உடன்பாடு என்பதுடன் ஆசியானுக்கு வெளியே முக்கியப் பங்காளியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆசியானின் முதல் உடன்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தத்தின் முதல் மேம்பாடு 2019ல் நடைமுறைக்கு வந்த நிலையில், இரண்டாவது மேம்பாடு தற்போது கையெழுத்தாகி உள்ளது.
அந்நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசியான்-சீனா உச்சநிலைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு அன்வார், மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பில் முக்கியமான படிக்கல் என்று குறிப்பிட்டார்.
“இருதரப்பு பொருளியல், வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் ஒரு புதிய வாய்ப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது,” என்றார் சீனப் பிரதமர் லீ.
தொடர்புடைய செய்திகள்
“சீனாவும் ஆசியானும் நெருங்கிய உறவுகளைப் பகிர்ந்துகொள்ளும், ஒன்றோடொன்று தொடர்புடைய, ஒன்றையொன்று சார்ந்த நல்ல அண்டை நாடுகள், சகோதரர்கள்,” என்றார் அவர்.
இருதரப்பும் ஒன்றுபட்டு, வலுப்படும்போது மாபெரும் ஆற்றலை வெளிப்படுத்தி எந்தச் சவாலையும் சமாளிக்க முடியும் என்ற அவர், அனைத்துலக அரங்கில் புதிய முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய தேவை இருப்பதையும் சுட்டினார்.
வட்டாரத்தில் வெளிப்புறத் தலையீடு அதிகரித்து வருவதுடன், ஒருதலைப்பட்சமான செயல்பாடும் தன்னைப்பேணித் தனமும் அனைத்துலகப் பொருளியல், வர்த்தக ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அவர் எச்சரித்தார்.
“பல நாடுகள் ஆதாரமற்ற அதிக வரிகளால் திக்குமுக்காட வைக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.
எந்த நாட்டின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும் அவரின் கருத்துகள் அமெரிக்காவைச் சாடுபவையாகவே இருந்தன.
தொடர்ந்து 16 ஆண்டுகளாக ஆசியானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா திகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், ஆசியானுடனான சீனாவின் வர்த்தகம் மொத்தம் 5.57 டிரில்லியன் யுவான் (யுஎஸ் $783.3 பில்லியன்) ஆகும். ஆண்டு அடிப்படையில் இது 9.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$ 3.9 டிரில்லியனுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளியலாக உள்ள ஆசியானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளி சீனா. இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு மொத்தம் யுஎஸ் $771 பில்லியன் ஆக இருந்தது.

