பெய்ஜிங்: சீனாவும் இந்தியாவும் ஒரே திசையில் பயணம் செய்ய வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி விருப்பம் தெரிவித்து உள்ளார்.
பெய்ஜிங் நகரில் தம்மைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் அவர் அவ்வாறு கூறினார்.
இரு நாடுகளும் மேலும் உறுதியான நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதோடு பரஸ்பர புரிதலுக்கும் கடப்பாடு கொள்ள வேண்டும் என்றும் இந்திய அதிகாரியிடம் திரு வாங் தெரிவித்தார்.
இந்திய, சீன எல்லையில் எழுந்த பதற்றத்தைத் தணிக்க 2024 அக்டோபர் மாதம் இரு நாடுகளும் அமைதி உடன்பாடு ஏற்படுத்திக்கொண்ட பிறகு அந்த இரு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி இருப்பது இதுவே முதல்முறை.
“இந்தியாவும் சீனாவும் ஒன்றையொன்று சந்தேகப்படுவது, யாரோ ஒருவர்போல நடந்துகொள்வது போன்றவற்றைக் கைவிட்டு இருதரப்பு ஆதரவு மற்றும் இருதரப்பு சாதனைகளை நோக்கிச் செயல்பட வேண்டும்,” என்று திரு வாங் தெரிவித்ததாக சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய, சீன எல்லையில் ராணுவ மோதல் நிகழ்ந்ததற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டு உடன்பாடு கையெழுத்தான பின்னர் இருதரப்பிலும் உயர்மட்டத் தலைவர்களின் சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.