ஜகார்த்தா: தங்களுக்கு இடையிலான ராணுவத் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ளவும் கனிமங்கள், எரிசக்தி போன்றவற்றில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனீசியாவும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) ஒப்புக்கொண்டன.
சீனா, அமெரிக்கா ஆகியவற்றுடனான உறவைச் சமமாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் இந்தோனீசியா ஈடுபட்டுள்ள நிலையில், சீனாவுடனான அதன் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தோனீசியப் பயணம்
சீனாவின் தற்காப்பு அமைச்சருடன் சேர்ந்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யி ஜகார்த்தாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தோனீசியாவின் வெளியுறவு, தற்காப்பு அமைச்சர்களைச் சந்திப்பதற்காக அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
“தற்போதைய உலகச் சூழல் சிக்கலான ஒன்று. தங்களை மட்டும் கருத்தில்கொண்டு பின்பற்றப்படும் அணுகுமுறை (unilateralism), பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் செயல்கள் ஆகியவை உலக ஒத்துழைப்பிலும் நிலைத்தன்மையிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன,” என்றார் திரு வாங்.
“உயர்நிலையில் சீனா - இந்தோனீசியா ஒத்துழைப்பை உருவாக்கச் சீனா தொடர்ந்து முயன்றுவருகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார். செயற்கை, நுண்ணறிவு, தற்காப்பு, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைக்க இரு நாடுகளும் உறுதிபூண்டன.
இந்தோனீசியாவின் அணுகுமுறை
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை எந்தத் தரப்பின் பக்கமும் சேராமல் நடுநிலையாக இருக்கும் போக்கை இந்தோனீசியா பின்பற்றிவருகிறது; அதைத் தொடரவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ குரல் கொடுத்துவருகிறார். சீனா, அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளுடனும் நட்பு வைத்துக்கொள்ளப்போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தோனீசியா, சீனா இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் முக்கிய அக்கறைகளுக்கு ஆதரவளிக்கவும் எரிசக்தி, கனிமவளங்களில் கூடுதலாக ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டிருப்பதாகத் திரு வாங் கூறினார்.
கனிமங்கள் அதிகமாக இருக்கும் இந்தோனீசியா, 1.4 டிரில்லியன் டாலர் (1.778 டிரில்லியன் வெள்ளி) மதிப்பிலான பொருளியலைக் கொண்ட ஜி20 நாடாகும். அதனிடம் அதிக அளவில் நிக்கல், தகரம், செம்பு போன்ற வளங்கள் இருக்கின்றன. மேலும், அந்நாடு உலகில் ஆக அதிக அளவில் செம்பனை எண்ணெய் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் நாடாகும்.
இந்தோனீசியாவின் நிக்கல் செயல்பாட்டுத் துறையில் சீனா ஆக அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. எனினும், அண்மையில் சட்டங்களில் விதிக்கப்பட்ட மாற்றங்கள் காரணமாகச் சில நிறுவனங்கள் மற்ற இடங்களில் வர்த்தகம் செய்வதன் தொடர்பில் ஆராய்ந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


