தோக்கியோ: அரியவகை கனிமங்கள் தொடர்பான பொருள்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், ஜப்பானின் ஃபூஜி இலெக்ட்ரிக் நிறுவன ஊழியர்கள் இருவரைச் சீனா அதிகாரபூர்வமாகக் கைது செய்துள்ளதாக அந்த விவகாரத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை (ஜூலை 1) தெரிவித்துள்ளன.
அவர்கள் இருவரும் வடகிழக்குத் துறைமுக நகரான டாலியானில் கடந்த மே 18, மே 25ஆம் தேதிகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட இறக்குமதி, ஏற்றுமதிக் கடத்தல் சட்டத்தை மீறிய சந்தேகத்தின் பேரில், உள்ளூர் சுங்கத்துறை அதிகாரிகள் ஜூன் நடுப்பகுதியிலும் ஜூன் இறுதியிலும் அவர்களைத் தனித்தனியே கைதுசெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தைவான் குறித்து ஜப்பானியப் பிரதமர் சானே தகாய்ச்சி தெரிவித்த கருத்துகளால் உருவான அரசதந்திரப் பிரச்சினையால் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மின்சார வாகனங்கள் முதல் ஆயுதங்கள் வரையிலான உயர் தொழில்நுட்பப் பொருள்களைத் தயாரிப்பதற்குத் தேவையான அரியவகை கனிமங்களின் ஏற்றுமதிகளை பெய்ஜிங் கட்டுப்படுத்தியுள்ளது.
அரியவகை கனிமக் காந்தங்களை (rare-earth magnets) பிரித்தெடுக்கக்கூடிய பொருள்களை வெளிநாட்டிற்கு அனுப்ப அந்த இரண்டு ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் சுங்கத்துறையினர் அதிருப்தி அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சீன நீதித்துறை நடைமுறைகளின்படி, சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்ட 37 நாள்களுக்குள் அவர்களை அதிகாரபூர்வமாகக் கைது செய்வதா வேண்டாமா என்பதை அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.
அவர்கள் அதிகாரபூர்வமாகக் கைது செய்யப்பட்டவுடன், அதிகாரிகள் அவர்களை ஏழு மாதங்கள் வரை காவலில் வைக்க முடியும்.

