‘ஏஐ’ துறையில் முதலிடத்தைப் பிடிக்கச் சீனா தீவிர முயற்சி

‘ஏஐ’ துறையில் முதலிடத்தைப் பிடிக்கச் சீனா தீவிர முயற்சி

2 mins read
2311bd6c-4e30-47cb-8f79-cb0fce14c7e3
ஷாங்காயில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் உலகக் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் சீனா முதலிடம் பெறும் என்று அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஏஐ’ துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

‌‌‌ஷாங்காயில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் தொடக்க விழாவில் திரு ஸி உரையாற்றியபோது அக்கருத்தைத் தெரிவித்தார்.

‘ஏஐ’ தொழில்நுட்பத்தை அணுகுவதில் ஏற்படும் சமத்துவமின்மையால் ‘புதிய வரலாற்று அநீதிகள்’ உருவாகும் என்று அதிபர் ஸி எச்சரித்தார்.

அதிபர் ஸியின் உரை, சீனாவின் இலவசச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் குறியீடுகளை ஓர் உலகளாவிய கட்டமைப்பாகக் காட்டுகிறது. இதனால் நாடுகள் அமெரிக்காவுக்கு மாற்றாகச் சீனாவைப் பார்க்கக்கூடும்.

செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை நீராவி இயந்திரம், மின்சாரம் ஆகிய கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்ட திரு ஸி, வளரும் நாடுகளுக்குச் சீனா தனது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்று உறுதியளித்தார்.

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மற்றும் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ அனைத்துலக முயற்சிக்கு ஒரு போட்டியாளராகச் சீனா உருவெடுத்துள்ளதை அந்த மாநாடு எடுத்துரைக்கிறது.

ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் தனியார் கட்டமைப்புகளுக்கு எதிராகச் சீனாவின் ஏஐ மாதிரிகள் விரைவான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அண்மையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்க அரசாங்கம் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைத் திடீரெனத் திரும்பப் பெற்றது.

அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சில வாரங்களில் பெய்ஜிங்கைச் சேர்ந்த மூன்ஷாட் ஏஐ (Moonshot AI) என்ற புதிய நிறுவனம், உலகின் மிகப்பெரிய இலவசச் செயற்கை நுண்ணறிவு மாதிரியான ‘கிமி கே3’யை (Kimi K3) வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

‘ஏஐ’ அமைப்புகள் மனிதக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் திரு ஸி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அதன் அபாயங்களை நிர்வகிக்க நாடுகள் முன்னெச்சரிக்கை, அவசரகால வழிமுறைகளைக் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சீனாஅமெரிக்காஏஐ