பெய்ஜிங்: தைவானின் கிழக்குக் கடலோரத்தில் சுற்றுக்காவல் பணியைத் தொடங்கி இருப்பதாக சீனா சனிக்கிழமை (ஜூலை 4) தெரிவித்துள்ளது.
தீவின் கடற்கரைக்கு அப்பால் கடலோரக் காவற்படை நிலைகொண்டிருப்பது தைவானைச் சினங்கொள்ளச் செய்திருப்பதாலும் சில மேற்கத்திய நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாலும் இந்தப் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியது.
கிழக்கு தைவானில் சட்ட அமலாக்கச் சுற்றுக்காவலில் ஈடுபட இருப்பதாக சீனாவின் கடலோரக் காவற்படை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கடல்நீரில் அதுபோன்ற சுற்றுக்காவலைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
அதற்கு தைவானின் கடலோரக் காவற்படை அளித்துள்ள பதிலில், சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் கண்காணிப்புக் கப்பல்களை நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டது.
“எங்கள் கடல் எல்லையைச் சீர்குலைக்கும் சீனக் கப்பல்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,” என்றும் அது தெரிவித்துள்ளது.
ஜனநாயக முறையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் தைவானைத் தனது சொந்தப் பகுதி என சீனா உரிமை கொண்டாடி வரும் வேளையில், ஒரு மாத காலத்தில் இரண்டாவது முறையாக தைவானின் கிழக்குக் கடலோரத்திற்குச் சீனா தனது சுற்றுக்காவல் படைகளை அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளின் கவனத்தை ஈர்த்து அரசதந்திரப் பூசலை மேலும் தீவிரமடையச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

