பெய்ஜிங்: அடுத்த ஐந்தாண்டுகளில் குழந்தைப் பிறப்புக்கு உகந்த சமுதாயத்தை உருவாக்கப்போவதாக சீனா கூறியிருக்கிறது.
வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவப் பராமரிப்பு, சுகாதாரம், வருமானம் ஆகியவற்றின் தொடர்பில் எழுந்துள்ள கவலைகளைச் சமாளிக்க அது உறுதிதெரிவித்தது.
அதிகாரபூர்வ அரசாங்க அறிக்கை ஒன்றில் அந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
அதிகாரிகள் மக்கள்தொகை சேவைகளை மேம்படுத்துவதோடு, மக்கள்தொகை மூப்படைதலின் தொடர்பில் திட்டமிட்டுச் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதில் வருமானப் பகிர்வு முறையை மேம்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு முறையைச் சீராக்குதல் ஆகியவை அடங்கும்.
சீனாவின் மக்கள்தொகை 2025ல் தொடர்ந்து நான்காம் ஆண்டாகக் குறைந்துள்ள நிலையில், அந்த அறிவிப்புகள் வந்துள்ளன. சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு இறங்கியதாக ஜனவரியில் வெளியான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டின.
அது மேலும் குறையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவின் மக்கள்தொகை சென்ற 2022ஆம் ஆண்டிலிருந்து குறைந்துவருவதோடு மட்டுமல்லாமல் விரைவாக மூப்படைந்தும் வருகிறது.
மூப்படையும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான உயர்தரப் பொருளியலை ஊக்குவிக்க, புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும். மூத்தோர் பராமரிப்புச் சேவைகள், குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரிக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, ஓய்வூதிய நிதி, முதியோர் நலன், பராமரிப்பு உள்ளிட்ட மூத்தோருக்காக வடிவமைக்கப்பட்ட ஆதரவுக் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் திட்டமிடுவர் என்றும் அறிக்கை கூறியது.

