தியனன்மென் சதுக்கம் நினைவுகளை சீனா அழிக்க முடியாது: ரூபியோ

தியனன்மென் சதுக்கம் நினைவுகளை சீனா அழிக்க முடியாது: ரூபியோ

2 mins read
8383c49f-f9cc-4cca-8860-543c9cff609b
வியாழக்கிழமை (ஜூன் 4) தியனன்மென் சதுக்கத்தில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: தியனன்மென் சதுக்கத்தில் 1989ஆம் ஆண்டு ராணுவம் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கையை பெய்ஜிங்கின் தணிக்கை நடவடிக்கைகளின் மூலம் அழிக்க முடியாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ கூறியுள்ளார்.

தியனன்மென் சதுக்கத்தில் நடந்த வன்முறையுடனான அடக்குமுறை நடவடிக்கையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் புதன்கிழமை (ஜூன் 3) அவ்வாறு கூறினார்.

அதிகம் மாறுபடாத கருத்துகள்

தியனன்மென் நிகழ்வைப் பற்றி திரு ரூபியோ முன்னதாக வெளியிட்ட கருத்துகளைப் போலத்தான் இப்போது அவர் பேசியதும் இருக்கிறது. அதேவேளை, சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கும் தமக்கும் இடையிலான உறவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பாராட்டிப் பேசிவரும் நிலையில் திரு ரூபியோவின் கருத்துகள் சீன அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள், ஜனநாயக ஆதரவாளர்கள் ஆகியோருக்கு மறுவுறுதியளிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

கடந்த மே மாதம் திரு டிரம்ப்பும் திரு ஸியும் பெய்ஜிங்கில் சந்தித்தனர்.

தியனன்மென் சதுக்க நிகழ்வு

1989ல் தியனன்மென் சதுக்கத்தில் சீனப் படைகள், ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிச் சுட்டதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. அந்நிகழ்வில் குறைந்தது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மரண எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

“ஜூன் நான்காம் தேதி, தியனன்மென் சதுக்கம், அதன் சுற்றுப் பகுதிகள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான அமைதி ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவிட்டு 37 ஆண்டுகள் ஆகியிருக்கும்,” என்று திரு ரூபியோ அறிக்கை மூலம் தெரிவித்தார்.

தணிக்கை நடவடிக்கையை சாடிய ரூபியோ

“எத்தனை தணிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் பழைய நினைவுகளை அழிக்க முடியாது. சுதந்திரமாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் அமைதியான முறையில் ஒன்றுகூடவும் தங்களுக்கு இருக்கவேண்டிய மறுக்க முடியாத உரிமைகளுக்காகத் தியாகம் செய்தோர் செய்தது சரி என்பது ஒருநாள் நிரூபிக்கப்படும்,” என்றார் அவர்.

ஆண்டுதோறும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் இந்நாளை நினைவுகூர்வது வழக்கமாக இருந்துவருகிறது. அது, பெய்ஜிங்குக்கு அதிருப்தி தரும் ஒன்றாகவும் இருக்கிறது.

சீனாவில் தியனன்மென் சதுக்க நிகழ்வைப் பற்றிப் பேசுவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்த விவகாரம் பெரிய அளவிலான தணிக்கை நடவடிக்கைகளுக்கு உள்ளாகிவருகிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்சீனாஅமெரிக்காவன்முறைமரணம்உயிரிழப்புதணிக்கை