பெய்ஜிங்: ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தைவானுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளதன் தொடர்பில் ஜப்பானுக்குச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் அச்செயல் தங்களை அதிருப்தியடையச் செய்துள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தைப்பேயில் உள்ள அதிபர் அலுவலகத்தில் ஜப்பானின் ஆளும் கட்சியின் நிர்வாகப் பொதுச் செயலாளர் கொய்ச்சி ஹகியுடாவை தைவான் அதிபர் லாய் சிங்-டே திங்கட்கிழமையன்று வரவேற்றார்.
மேலும், வட்டார நிலைத்தன்மையைப் பேணவும் சுதந்திரமாகத் தடையின்றி இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் வளர்ச்சிக்கும் ஜப்பானுக்கும் தைவானுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை தைவான் அதிபர் வலியுறுத்தினார்.
சீனா தைவானைத் தாக்கினால், ஜப்பான் உதவிக்கு வரும் என ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி நவம்பர் மாதம் கூறினார்.
அதற்குப் பிறகு தைவான், ஜப்பான் தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இது.
ஜப்பானியப் பிரதமரின் கூற்று சீனாவை ஏற்கெனவே சினமூட்டிய நிலையில், தற்போது நடைபெறும் சந்திப்பு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

