பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நியூயார்க்கிற்குப் பயணம் மேற்கொண்டு, மே 26ஆம் தேதி ஐக்கிய நாட்டு (ஐநா) நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தின் உயர்நிலைக் கூட்டத்திற்குத் தலைமைதாங்குவார்.
சீன வெளியுறவு அமைச்சு அத்தகவலை வெள்ளிக்கிழமை (மே 22) வெளியிட்டது.
நியூயார்க்கில் திரு வாங், ஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரசையும் மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்திப்பார் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது. அது மேல்விவரங்களை வெளியிடவில்லை.
அதனைத் தொடர்ந்து, அவர் மே 28 முதல் மே 30 வரை கனடா செல்வார். 10 ஆண்டுகளில் சீன வெளியுறவு அமைச்சர் ஒருவர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் அது என்று அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாக்குன் பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
“சீனா - கனடா உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. இருதரப்பும் புதிய உத்திபூர்வ பங்காளித்துவத்தை உருவாக்க இணைந்து செயல்பட்டுவருகின்றன,” என்று திரு குவோ தெரிவித்தார்.
அந்தப் பயணம் அரசியல் நம்பிக்கையை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கக்கூடிய பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றார் அவர்.
அதோடு, அப்பயணத்தின் மூலம் இரு நாடுகளும் அவற்றுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு, இருதரப்பு உறவுகளை ஆரோக்கியமான, நிலையான, நீடித்த ஒரு பாதையில் கொண்டுசெல்லும் என்று பெய்ஜிங் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

