ஷாங்காய்: சீனக் குடிமக்களை வெளிநாடுகளுக்கு ஈர்த்து, மோசடி முகாம்களுக்கு விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த ஆட்கடத்தல் கும்பலின் 17 உறுப்பினர்கள்மீது ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தாய்லாந்து - மியன்மார் எல்லைக்கு அருகில் காணாமல்போன சீன நடிகர் வாங் சிங் என்பவரும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் எனச் சீன அரசாங்க ஊடகமான ‘சிசிடிவி’ கூறியது.
கைதுசெய்யப்பட்ட 17 சந்தேக நபர்கள்மீது பெண்களைக் கடத்தியது, சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தது, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஷாங்காய் மக்கள் வழக்கறிஞர் அலுவலகத்தின் இரண்டாவது கிளை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இருப்பினும், அவர்களின் குடியுரிமை குறித்து அந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
மியாவாடி பகுதியைத் தளமாகக் கொண்டு இயங்கிய அந்த எல்லை தாண்டிய கும்பல், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என்ற போர்வையில் சீனக் குடிமக்களை ஆசை காட்டி வரவழைத்தது.
பின்னர், ஆயுதம் ஏந்திய நபர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் பலவந்தமாக மியாவாடிக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பலர் கொள்ளையடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு, சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெண்கள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பாலியில் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் கூறினர்.
சீனச் சட்டத்தின்படி, பெண்களைக் கடத்துவது, ஆட்கடத்தல், கடுமையான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனைவரை அல்லது மிகக் கடுமையான வழக்குகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.


