ஜெனிவா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதுவரை விதித்துள்ள வரிகள், இனி விதிக்கவிருக்கும் வரிகள் ஆகியவற்றை சீனா சாடியுள்ளது.
திரு டிரம்ப்பின் இந்நடவடிக்கை பணவீக்கத்தை மோசமாக்கக்கூடும், வர்த்தகச் சந்தை நிலவரத்தைப் பாதிக்கக்கூடும் என்று சீனா, உலக வர்த்தக அமைப்பில் குறைகூறியது; உலகப் பொருளியல் மந்தமாகும் அபாயம் ஏற்படக்கூடும் என்றும் சீனா செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 18) சொன்னது.
கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற திரு டிரம்ப், உலகின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியலான சீனா மீது கூடுதலாக 10 விழுக்காடு வரி விதித்தார். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு அந்த வரி பொருந்தும்.
எஃகு, அலுமினியம் ஆகியவற்றுக்குப் புதிய 25 விழுக்காடு வரி விதிப்பதற்கான உத்தரவிலும் திரு டிரம்ப் சென்ற வாரம் கையெழுத்திட்டார்.
மேலும், இறக்குமதியாகும் கார்கள் மீது புதிதாக சுமார் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும் அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியன்று அது உள்ளிட்ட புதிய வரிகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“உலகம் வரிகளால் ஏற்படும் அதிர்ச்சிகளை எதிர்கொள்ளவிருக்கிறது,” என்றார் உலக வர்த்தக அமைப்புக்கான சீனத் தூதர் லீ செங்காங், உலக வர்த்தக அமைப்பின் சந்திப்பின்போது கூறினார்.