ஷாங்காய்: ஒன்பது பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோராகிவிட்ட பின்னரும் சீன இணையரின் அந்த ஏக்கம் இன்னும் தீரவேயில்லை.
ஆண் பிள்ளை இல்லையே என்பதே அந்த ஏக்கம்.
அந்த ஏக்கத்தைத் தங்கள் மகள்களின் பெயரிலேயே அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சகோதரன் எனப் பொருள்படும் ‘டி (di)’ எனும் சொல், அவர்கள் அனைவரது பெயரின் முடிவிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த அதிசயக் குடும்பம், சீனாவின் கிழக்கு மாநிலமான ஜியாங்சுவிலுள்ள ஹுவாயன் எனும் சிற்றூரில் வசித்து வருகிறது.
குடும்பத் தலைவரான ஜி என்பவருக்குத் தற்போது 81 வயதாகிறது.
மூத்த மகள் ஸாவ்டிக்கு வயது 60, இளைய மகள் மெங்டியின் வயது 40.
பாண்டி, வாங்டி, ஸியாங்டி, லைடி, யிங்டி, நியாண்டி, சௌடி என்பவை முறையே மற்ற பெண் பிள்ளைகளின் பெயர்கள்.
“என் தந்தைக்கு மகன் என்றால் கொள்ளை ஆசை. அதனால்தான் மகன் பிறப்பான் என்ற ஆசையில் ஒன்பது பிள்ளைகளைப் பெற்றுவிட்டனர். நாங்கள் ஆணாகப் பிறக்கவில்லை என்றாலும் எங்கள்மீதும் அவர்கள் அதிகப் பாசத்துடன் உள்ளனர். ஒருபோதும் எங்களை அவர்கள் தவறாக நடத்தியதில்லை. பெரிய குடும்பமாக இருந்தாலும் நாங்கள் ஒன்றாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம்,” என்றார் ஸியாங்டி.
தொடர்புடைய செய்திகள்
ஏழை விவசாயிகள் என்றபோதும், தங்களில் எவரையும் பள்ளியைவிட்டு நிறுத்தாமல் தங்கள் தந்தை பார்த்துக்கொண்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘மகள்கள் என்றால் என்ன? நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் கல்வி பயில என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என்று தங்கள் தந்தையார், தங்கள் தாயாரிடம் அடிக்கடி கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இம்மாதத் தொடக்கத்தில் தங்கள் குடும்ப வாழ்க்கை குறித்து சமூக ஊடகம் வழியாக ஸியாங்டி பகிர்ந்துகொண்டதை அடுத்து, அவர்கள் பேசுபொருளாக மாறிவிட்டனர்.
சீனாவில் ஜி போன்றே மேலும் பல குடும்பங்கள், ‘மகன் இருந்தால் இறுதிக்காலத்தில் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்’ என நம்புகின்றனர்.
ஆயினும், கடந்த சில பத்தாண்டுகளாக அந்த எண்ணம் மாறி வருகிறது.
குறிப்பாக, பெருநகரங்களில் வசிக்கும் இணையர்கள் இப்போதெல்லாம் மகள்களையே விரும்புவதாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி குறிப்பிட்டுள்ளது.
திருமணத்தின்போது மணமகன் அதிக வரதட்சணை வழங்க வேண்டியுள்ளதும் அதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.