டியன்ஜின், சீனா: சீனாவால் பயனீட்டாளர்களின் நுகர்வுப் போக்கை பொருளியல் வளர்ச்சிக்கான உந்துதலாகப் பயன்படுத்த முடியும் என்று அந்நாட்டுப் பிரதமர் லீ சியாங் கூறியுள்ளார். அதோடு துரிதமாக மாறிவரும் அனைத்துலக வர்த்தக நிலையையும் சீனாவால் நிலைப்படுத்த முடியும் என்றார் அவர்.
உற்பத்தியில் ஏற்கெனவே திடமான அடித்தளம் கொண்ட சீனாவை மிகப் பெரிய பயனீட்டாளர் நடுவமாகக் கொள்கை வகுப்பாளர்கள் மாற்றுவதாக டியன்ஜின்னில் நடைபெற்ற அனைத்துலகப் பொருளியல் மாநாட்டில் திரு லீ கூறினார்.
“அது அனைத்து நாடுகளிலிருந்தும் மிகப் பெரிய சந்தைகளையும் நிறுவனங்களையும் கொண்டுவரும்,” என்று திரு லீ வலியுறுத்தினார்.
உலக நாடுகள் அனைத்துலக வர்த்தக பூசல்களைச் சந்தித்துவரும் வேளையில், வழக்கத்தை மாற்றி, உறுதியுடன் முன்னேறி, உலகப் பொருளியலில் நிலைத்தன்மையையும் நிச்சயத்தையும் கொண்டுவரும் நிலையில் சீனா இருக்கிறது என்றார் திரு லீ.
டிரம்ப் நிர்வாகத்தின் வரிகளையோ அமெரிக்காவின் தொழில்நுட்ப முடக்கத்தையோ திரு லீ நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் பொருளியலையும் வர்த்தகத்தையும் அரசியலாக்குவதை அனைத்து தரப்புகளும் தவிர்க்கவேண்டும் என்ற திரு லீ, சீனாவின் அணுகுமுறை அனைவருக்கும் பலனளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொருளியல் வளர்ச்சிக்குப் பயனீட்டாளர் துறையை முக்கிய உந்துசக்தியாகப் பயன்படுத்த முடியும் என்று சீன அதிகாரிகள் அடிக்கடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். ஆனால் சீன ஏற்றுமதிகளை உலக நாடுகளின் அரசாங்கங்கள் பின் தள்ளுவதால் அதை துரிதப்படுத்துவதில் இப்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
பயனீட்டாளர்கள் ஆண்டு முழுவதும் மானியங்கள் தொடர்ந்து பெறுவதற்குத் திட்டமிட்ட நிதியிலிருந்து 138 பில்லியன் யுவென்னை ஒதுக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அரசு ஊடகம் சொன்னது.
கொள்கை வகுப்பாளர்கள் பொருளியலுக்கு உதவ ஆதரவை வலுப்படுத்தவேண்டும் என்று திரு லீ சொன்னார். வளர்ச்சியைத் துரிதப்படுத்த அரசாங்கம் அதன் செலவுகளை அதிகரித்துள்ளது. அதையடுத்து மே மாதம் அரசாங்கத்துக்கு 3.3 டிரில்லியன் யுவென் பற்றாக்குறை ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சீனாவில் நடைபெறும் மாநாட்டில் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங் உள்பட உலகத் தலைவர்களும் அனைத்துலக வர்த்தக நிர்வாகிகளும் கலந்துகொண்டுள்ளனர்.