தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவின் வரியால் டிக்டாக் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த சீனா

2 mins read
efc579f8-f0eb-4852-99ed-f605ac84000e
அமெரிக்காவின் லாஸ் எஞ்சலஸ் நகரில் டிக்டாக் தளத்தின் நிறுவனம். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: டிக்டாக் சமூக தளம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்ததுக்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. திரு டிரம்ப் அறிவித்த வரிகளால் சீனா அந்த முடிவை எடுத்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

சீன நிறுவனமான பைட்டான்ஸ் டிக்டாக் தளத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கான கால அவகாசத்தைத் திரு டிரம்ப் மேலும் 75 நாள்களுக்கு நீட்டித்துள்ளார்.

டிக்டாக் தளத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 5 என்று இதற்குமுன் திரு டிரம்ப் கூறியிருந்தார். அப்படிச் செய்யாவிட்டால் டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படும். தற்போது டிக்டாக் தளம் குறித்த ஒப்பந்தத்தை சீனா நிராகரித்ததை அடுத்து காலக்கெடுவை திரு டிரம்ப் நீட்டிப்பதாக அறிவித்தார்.

ஏப்ரல் 2ஆம் தேதி, புதன்கிழமை முடிவான ஒப்பந்தத்தின்படி டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகள் புதிய நிறுவனம் ஒன்றின்கீழ் வரும். அதில் அமெரிக்க முதலீட்டாளர்கள் பெரும்பங்கு வகிப்பதோடு அதை நிர்வகிப்பர். சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் புதிய நிறுவனத்தில் 20 விழுக்காட்டுக்கும் குறைவான பங்குகளையே வைத்திருக்கும்.

அமெரிக்காவின் தற்போதைய முதலீட்டாளர்கள், புதிய முதலீட்டாளர்கள், பைட்டான்ஸ் நிறுவனம், அமெரிக்க அரசாங்கம் ஆகியவை அதற்கு ஒப்புதல் தெரிவித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இருப்பினும், ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக பைட்டான்ஸ் நிறுவனம் ஏப்ரல் 5ஆம் தேதி குறிப்பிட்டது. ஒப்பந்தம் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்றும் அமெரிக்க அரசாங்கத்துடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் அது கூறியது.

இருதரப்பும் பல முக்கிய அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் அது சொன்னது.

அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் டிக்டாக் தளம் குறித்த தனது நிலைப்பாட்டை சீனா பலமுறை முன்வைத்திருப்பதாகத் தெரிவித்தது.

சீனா, நிறுவனங்களை மதிப்பதோடு அவற்றின் உரிமைகளைப் எப்போதும் பாதுகாத்து வந்திருப்பதாகத் தூதரகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்