மனித உரிமை மீறல் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

மனித உரிமை மீறல் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

2 mins read
22cb47cf-39ed-40f4-93ad-929be238c86b
பெய்ஜிங்கில் உள்ள சீனாவின் வர்த்தக அமைச்சகம். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவில் சிறுபான்மையினரைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகக் கூறி, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. சீனாவில் அதுபோன்ற மனித உரிமை மீறல் நடந்ததற்கான எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோகச் சங்கிலியைச் சீர்குலைப்பதாக அது சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

தனது உள்நாட்டுச் சட்டங்களைப் பயன்படுத்தி சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமான தடைகளை விதித்துள்ளது. இது பொருளாதார அச்சுறுத்தல் என்றும், நிறுவனங்களின் நியாயமான உரிமைகளை இது பாதித்துள்ளதாகவும் சீனாவின் வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டும் சின்ஜியாங் (Xinjiang) பகுதி, நிலைத்தன்மையுடனும் வளமுடனும் உள்ளது. அங்கு சிறுபான்மையினரைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கும் செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் சீனா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்தப் பிரச்சினையை வைத்துக்கொண்டு சின்ஜியாங் மீது அவதூறு பரப்புவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா, தனது நியாயமற்ற அழுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது.

மேலும், தமது நாட்டு நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெய்ஜிங் எச்சரித்துள்ளது.

முன்னதாக, உய்குர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களிடம் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி, மேலும் 43 சீன நிறுவனங்களிடமிருந்து பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா வெள்ளிக்கிழமை தடை விதித்திருந்தது.

சின்ஜியாங் பகுதியில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலைகளும் தொடர்வதாகக் கூறும் அமெரிக்கா, ‘உய்குர் கட்டாய உழைப்புத் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் இந்த நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சீனாமனித உரிமைஅமெரிக்கா