குழந்தைகள், இளையோர்க்கு உகந்த நகரங்களை வடிவமைக்கும் சீனா

குழந்தைகள், இளையோர்க்கு உகந்த நகரங்களை வடிவமைக்கும் சீனா

2 mins read
2035க்குள் இளைஞர் மேம்பாட்டில் முதிர்ச்சியடைந்த சமூகமாக சீனா உருமாறும்
b80fc00b-edb9-418a-9cbc-ac110d83b6ba
சீனாவில் குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு விகிதத்தை மீட்டெடுக்க அரசாங்க அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: இளையோர்க்கும் குழந்தைகளுக்கும் உகந்த வகையில் நகரங்களை வடிவமைக்க சீன அரசாங்கம் பெரிய அளவில் முயற்சிகளை எடுத்துவருகிறது.

கடந்த 2025ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் 3.39 மில்லியன் வீழ்ச்சியடைந்து 7.9 மில்லியன் குழந்தைகளே சீனாவில் பிறந்தன. நான்காம் ஆண்டாக அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து சீனாவில் மக்கள் தொகையை மீட்டெடுக்க அரசாங்க அமைப்புகள் பல நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.

வீடுகள், மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பு, கல்வி, பொதுச் சேவை ஆகியவை உள்ளடங்கிய நகர வடிவமைப்பில் இளையோர் மேம்பாடு உள்ளடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சீன அமைப்புகள் புதிய வரையறைகளை வகுத்துள்ளன.

அதன்வழி, இளையோர்களும் குழந்தைகளும் அடங்கிய குடும்பங்களுக்குப் புதிய நகரவடிவமைப்பு ஆதரவாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க அமைப்பைச் சேர்ந்த 15 துறைகள் புதன்கிழமை (ஏப்ரல் 22) திட்ட வரையறைகளை வெளியிட்டன. அவற்றில் வேலைவாய்ப்பு, வீடமைப்பு, சுகாதார வசதி, குடும்ப ஆதரவு, நகரில் இயங்கும் பொதுச் சேவைகள் என இளையோரை மையப்படுத்திய பல அம்சங்கள் இருந்தன.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் “குழந்தை பிறப்பை வரவேற்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்,” என்று கடந்த மார்ச் மாதம் சீன அரசாங்கம் சூளுரைத்ததை அடுத்து இந்த முக்கிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திருமணப் பொருத்த சேவை, சமூக ஒருங்கிணைப்பு, மகப்பேறு குழந்தை பராமரிப்புச் சேவையில் மேம்பாடு, மானியங்கள், பொது இடங்களில் தாய் சேய் வசதி, பள்ளிக்குப் பிறகு பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சேவை, வெளிநாட்டு ஊழியர்களும் உள்ளடங்கிய சமமான வசதிகள் என புதிய திட்டத்தில் பல ஏற்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்