வாஷிங்டன்: உலகளாவிய கடற்துறை, கப்பல் கட்டுமானத்துறை, தளவாடங்கள் ஆகியவற்றில் நியாயமற்ற கொள்கை, நடைமுறைகளைப் பின்பற்றி சீனா ஆதிக்கம் செலுத்துகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஒரு மாத காலத்திற்கு மேல் நீடித்த விசாரணை விவரங்களை நன்கறிந்த மூன்று வட்டாரங்கள் இதனை தெரிவித்தன.
ஐக்கிய எஃகு ஊழியர் சங்கம் மற்றும் இதர நான்கு அமெரிக்க சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் கடந்த 2024ஆம் ஆண்டு இந்த விசாரணையைத் தொடங்கினார். அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக நியாயமற்ற, காரணமில்லாமல் நடக்கும் வெளிநாடுகளை தண்டிக்க அமெரிக்க சட்டம் வழி வகுக்கிறது.
நிதியாதரவு, வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தடை, கட்டாயமாக தொழில்நுட்பங்களை மாற்றுவது, காப்புரிமை சொத்துகளைத் திருடுவது, அதன் கப்பல் கட்டுமானம், கடற்துறைக்கு நன்மையளிக்கும் வகையில் கொள்முதல் கொள்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கப்பல் கட்டுமானம், கடற்துறையை இலக்காகக் கொண்டு சீனா ஆதிக்கம் செலுத்துவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொதுவெளியில் பேச அனுமதிக்கப்படாத ஒரு தகவல் தெரிவித்தது.
பெய்ஜிங்கும் கடல், கப்பல் கட்டுமானத் துறை மற்றும் தளவாடத் துறையில் சீனாவின் தொழிலாளர்களுக்கான செலவினங்கள் கடுமையாகவும் செயற்கையாகவும் குறைத்து வைத்துள்ளது என்று அந்த தகவல் அறிக்கையின் சில பகுதிகளை மேற்கோள் காட்டி மேலும் கூறியது.
இதற்கு, வெள்ளை மாளிகை அல்லது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டடோனல்ட் டிரம்ப்பின் குழுவிடம் இருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை. சீன அதிகாரிகளும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
ஏறக்குறைய 150 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய கப்பல் கட்டுமானத் துறையில் சீனாவின் பங்கு 2000ஆம் ஆண்டில் 5%ஆக இருந்தது. இது, 2023ல் 50 விழுக்காடாக விரிவடைந்துள்ளது.
இது, பெரும்பாலும் சீன அரசாங்கத்தின் மானியங்களால் சாத்தியமாகிறது. ஒரு காலத்தில் கப்பல் கட்டுமானத் துறையில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க நிறுவனங்கள் தற்போது அவற்றின் பங்கு ஒரு விழுக்காட்டுக்கும்கீழ் குறைந்துவிட்டது. தென்கொரியாவும் ஜப்பானும் அடுத்ததாக கப்பல் கட்டுமானத் துறையில் அதிகளவு பங்காற்றி வருகின்றன.

