பெய்ஜிங்: மத்திய சீனாவில் முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான 39 வயது வாங் யுன்னின் மரண தண்டனை இந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. சீன அரசாங்க ஊடகம் வெள்ளிக்கிழமை அதனைத் தெரிவித்தது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் குழந்தைகள் பருகும் கஞ்சியில் நஞ்சு கலந்த குற்றத்திற்காக அந்த மாதுக்கு 2020 செப்டம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கஞ்சியை அருந்திய குழந்தைகளில் ஒன்று 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது. 24 குழந்தைகளுக்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
அந்த மாது தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், அவருடைய மேல்முறையீட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் வியாழக்கிழமை அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
2019 மார்ச் மாதத்தில் சக ஆசிரியர் ஒருவருடன் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு வாங் ‘சோடியம் நைட்ரைட்’ எனும் வேதிப்பொருளை வாங்கினார். அதில் சிறிதளவை மறுநாள் காலை பாலர் பள்ளிப் பிள்ளைகள் அருந்தும் கஞ்சியில் அவர் கலந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
சீன பாலர் பள்ளிகளில் அண்மையில் நடந்த வன்செயல்களில் இதுவும் அடங்கும். சீனா வழக்கமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் தகவல்களை வெளியிடுவதில்லை என்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுட்டியது.


