அமெரிக்கப் பொருள்கள்மீது உள்ள 24% வரி நிறுத்திவைப்பை நீட்டிக்கும் சீனா

அமெரிக்கப் பொருள்கள்மீது உள்ள 24% வரி நிறுத்திவைப்பை நீட்டிக்கும் சீனா

படம்: இபிஏ

09 Nov 2026 - 9:01 pm

1 mins read

பெய்ஜிங்: அமெரிக்க இறக்குமதிகள்மீதான தனது கூடுதல் 24 விழுக்காட்டு வரியை நிறுத்தி வைப்பதையும் அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களுக்கான சிறப்புக் துறைமுகக் கட்டணங்களை நிறுத்தி வைப்பதையும் சீனா மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

திங்கட்கிழமை (நவம்பர் 10) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.01 மணி முதல், அமெரிக்க இறக்குமதிகள்மீதான 24 விழுக்காட்டுக் கூடுதல் வரி நிறுத்திவைப்பு இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்றும் ஆனால் 10 விழுக்காட்டு வரி தொடர்ந்து நீடிக்கும் என்றும் அந்நாட்டின் அமைச்சரவை தெரிவித்தது.

அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களுக்கான சிறப்புத் துறைமுகக் கட்டணங்கள் நிறுத்தி வைக்கப்படுவது 2027 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படும் என்று சீனாவின் போக்குவரத்து அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டது.

மேலும், கப்பல் போக்குவரத்து, கப்பல் கட்டும் விநியோகத் தொடர்புப் பாதுகாப்பு தொடர்பான விசாரணையை நிறுத்தி வைப்பதையும் சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சு சுட்டியது.

செப்டம்பரில் வாஷிங்டனில் நடைபெற்ற இருநாட்டுத் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பிற்குப் பிறகு, இரு தரப்பும் பரஸ்பரமாக 60 பில்லியன் டாலர் மதிப்பிலான வரிக்குறைப்புத் திட்டத்தை முன்வைத்தன.

அதில் 2024ஆம் ஆண்டில் சீனா இறக்குமதி செய்த 17 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க வேளாண் பொருள்களும் அடங்கும். இருப்பினும், அத்திட்டம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சீனா, அமெரிக்க நாட்டுத் தலைவர்களுக்கு இடையே வாஷிங்டன் சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகளையும் ஒருமித்த கருத்தையும் நடைமுறைப்படுத்துவதற்காகவே சீனா இந்த வரி நிறுத்திவைப்புகளை நீட்டிக்கிறது என்று அரச மன்றத்தின் வரிக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாஅமெரிக்காவரிநீட்டிப்பு