தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வர்த்தகப் போரில் இறுதிவரை போராட்டம் தொடரும்: சீனா

2 mins read
60152391-e036-4925-b9c0-1cda0bc07ceb
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த ஆண்டு (2025) மே 10ஆம் தேதி நடைபெற்ற இருதரப்புக் கூட்டத்தின்போது வைக்கப்பட்டிருந்த அந்நாடுகளின் கொடிகள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனா, அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இறுதிவரை போராடப்போவதாகக் கூறியிருக்கிறது. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்குக் கூடுதலாக 100 விழுக்காட்டு வரியை விதிக்கப்போவதாய் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சொன்னதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) பெய்ஜிங்கின் கருத்து வந்துள்ளது.

நாட்டில் உள்ள அரிய கனிமவளங்களை ஏற்றுமதி செய்வதற்குச் சீனா சென்ற வாரம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பிறகு திரு டிரம்ப் கூடுதல் வரிபற்றி அறிவித்தார்.

அடுத்த மாதம் (நவம்பர்) 1ஆம் தேதியிலிருந்து அனைத்து முக்கிய மென்பொருள்களையும் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் அறிவிப்பால் பங்குச் சந்தைகள் ஆட்டங்கண்டன. தென்கொரியாவில் விரைவில் ஏபெக் மாநாடு நடைபெறவிருக்கிறது. அதில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இப்போது அந்தச் சந்திப்பை இரு தரப்புக்கும் இடையிலான பூசல் கேள்விக்குறியாக்கியுள்ளது.

“தீர்வை, வர்த்தகப் போர்களில் சீனாவின் நிலை தொடர்ந்து ஒரே மாதிரியாகத்தான் இருந்துவருகிறது,” என்று சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் அறிக்கையொன்றில் கூறினார்.

“நீங்கள் சண்டையிட விரும்பினால், நாங்கள் இறுதிவரை போராடுவோம்; மாறாக நீங்கள் சமரசப் பேச்சுக்கு முன்வந்தால், எங்களின் கதவுகள் எப்போதுமே திறந்துதான் இருக்கின்றன,” என்றார் அவர்.

அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக மிரட்டும் வேளையில் கலந்துபேச வரும்படி கூறக்கூடாது என்றது அறிக்கை. சீனாவுடன் பேச அது சரியான அணுகுமுறை அல்ல என்பதையும் அறிக்கை சுட்டியது.

குறிப்புச் சொற்கள்