‘டிரிப்.காம்’ குழுமத்திற்கு $671.4 மில்லியன் அபராதம் விதித்த சீனா

‘டிரிப்.காம்’ குழுமத்திற்கு $671.4 மில்லியன் அபராதம் விதித்த சீனா

2 mins read
9e677284-e179-4122-a0c8-5751a2ba032c
ஹோட்டல்கள் மீது நியாயமற்ற விதிமுறைகளைச் சுமத்தியதாகவும் கட்டணங்களைக் கையாண்டதாகவும் ‘டிரிப்.காம்’ குழுமத்தின்மீது புகார்கள் வந்தன. - படம்: சாவ்பாவ்

பெய்ஜிங்: சீனாவின் இணையவழி ஹோட்டல் முன்பதிவுச் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக, ‘டிரிப்.காம்’ (Trip.com) குழுமத்திற்குக் கிட்டத்தட்ட $671.4 மில்லியன் (3.52 பில்லியன் யுவான்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீனச் சந்தை ஒழுங்குமுறைக்கான அமைப்பு நடத்திய சந்தைப் போட்டித்தன்மைக்கு எதிரான விசாரணையைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ‘டிரிப்.காம்’ ஈட்டிய $316.65 மில்லியன் (1.66 பில்லியன் யுவான்) வருவாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர, ஹோட்டல் உரிமையாளர்களிடமிருந்து வைப்புத் தொகையாகப் பெற்ற $23.27 மில்லியன் (122 மில்லியன் யுவான்) பணத்தை உடனடியாகத் திருப்பித் தருமாறும் அக்குழுமத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய இணையவழிப் பயணத்தைத் திட்டமிடுவதற்கான தளமாக விளங்கும் ‘டிரிப்.காம்’, குறைந்த விலையில் சேவைகளை வழங்குவதற்காகத் தனது இணையப் போக்குவரத்துப் பகிர்வு முறை, தள விதிமுறைகள், தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி சில ஹோட்டல்களுடன் மட்டும் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது.

அத்தகைய நடவடிக்கைகள், ஹோட்டல் உரிமையாளர்கள் பிற இணையத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தன.

அவர்களின் விலை நிர்ணய உரிமையையும் அது பாதித்தது.

இதனால், சந்தைப் போட்டியும் பயனீட்டாளர் நலன்களும் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமையன்று (ஜூலை 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹோட்டல்கள் மீது நியாயமற்ற விதிமுறைகளைச் சுமத்தியதாகவும் கட்டணங்களைக் கையாண்டதாகவும் வந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இந்த விசாரணை தொடங்கியது.

இதற்கிடையே, சீன அரசாங்கத்தின் இந்த முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக ‘டிரிப்.காம்’ குழுமம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒழுங்குமுறை அமைப்பின் அனைத்துத் தேவைகளையும் பின்பற்றி, தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளைச் சீராகச் செயல்படுத்துவதாகவும் அக்குழுமம் உறுதி அளித்துள்ளது.

இணையத்தளங்களுக்கு இடையிலான நியாயமற்ற போட்டிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தவும் வர்த்தகப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் சீன அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீட்ரிப் (CTrip), ஸ்கைஸ்கேனர் (Skyscanner), கூனார் (Qunar) ஆகிய புகழ்பெற்ற பயண முன்பதிவுச் சேவை வழங்கும் நிறுவனங்களும் ‘டிரிப்.காம்’ குழுமத்திற்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சீனாபோட்டித்தன்மைசந்தைஅபராதம்