வடகொரியாவுடனான நட்பு எந்தச் சூழ்நிலையிலும் மாறாது: சீனா

வடகொரியாவுடனான நட்பு எந்தச் சூழ்நிலையிலும் மாறாது: சீனா

2 mins read
c0cad192-7a03-4f41-8480-61941b81ba7b
பெய்ஜிங் வந்த வடகொரியப் பிரதமர் பாக் தே சொங்கைச் (இடது) சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்தார். - ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சோல்: உலகின் சூழ்நிலை எப்படி மாறினாலும் வடகொரியாவுடனான பாரம்பரிய நட்பு என்றும் மாறாது என்று சீனா தனது கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தியிருக்கிறது.

சீன அதிபர் ஸி ஜின்பிங் இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கிறார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பறிமாறிக்கொண்ட கடிதத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளதாக வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ சனிக்கிழமை (ஜூலை 11) தெரிவித்தது.

சீன அதிபருக்கு எழுதிய கடிதத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நட்பும் ஒத்துழைப்பும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகத் திரு கிம் ஜோங் உன் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு நட்புறவு ஒப்பந்தத்தின் 65வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக வடகொரியப் பிரதமர் பாக் தே சொங் ஜூலை 10ஆம் தேதி பெய்ஜிங் சென்றிருந்தார்.

சீனாவுக்கு அவர் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, கடந்த ஜூன் மாதம் சீன அதிபர் ஸி ஜின்பிங் வடகொரியத் தலைநகரான பியோங்யாங்கிற்குப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, அரசியல், பொருளியல், கலாசாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது பற்றி இரு தலைவர்களும் கலந்து ஆலோசித்தனர்.

கடந்த 1961ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த நட்புறவு, ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி ஒப்பந்தமே தற்போதைய நிலையில் சீனா தற்காப்புக்காகப் போட்டுக்கொண்ட ஒரே ஒரு தீவிரக் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.

திரு ஸி, தான் எழுதிய கடிதத்தில், “அனைத்துலக அளவில் அரசியல் சூழ்நிலை எப்படி மாறினாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் வடகொரியாவுடனான பாரம்பரிய நட்புறவுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும். கிம் ஜோங் உன்னின் தலைமையிலான வடகொரிய சோ‌ஷலிசப் பாதைக்குச் சீனா என்றும் உறுதுணையாக இருக்கும். இரு நாடுகளின் பொதுவான நலன்களையும், சாதகமான உத்திபூர்வ சூழ்நிலைகளையும் பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து உறுதியுடன் செயல்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்