பெய்ஜிங்: சீனா தைவானுக்குப் பத்துப் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
சுற்றுப்பயணத் தடைகளைத் தளர்த்துதல், ‘ஆரோக்கியமான’ தொலைக்காட்சி நாடகங்களுக்கு அனுமதி வழங்குதல், உணவு விற்பனைக்கு ஆதரவு போன்ற சலுகைகள், தைவானிய எதிர்க்கட்சித் தலைவரின் சீனப் பயணத்துக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அறிவிக்கப்பட்டன.
தைவானின் ஆகப் பெரிய எதிர்க்கட்சியான குவோமிந்தாங் (கேஎம்டி) கட்சியின் தலைவர் செங் லி-வுன் தமது பயணத்தின்போது சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றின் தேவை குறித்து அவர் அதிபர் ஸியிடம் பேசியதாகக் கூறப்பட்டது.
சீனாவின் புதிய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அந்நாட்டின் அரசாங்க ஊடகமான சின்ஹுவா வெளியிட்டுள்ளது.
இருதரப்புக்கும் இடையே விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது, ஷாங்காய், ஃபூஜியான் பகுதிகளிலிருந்து தனிநபர்கள் தைவானுக்குச் சுற்றுப்பயணம் செல்வதற்கான அனுமதி, கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ‘கேஎம்டி’ கட்சிக்கும் இடையில் தொடர்பு நடைமுறையை நிறுவுவது போன்றவை குறித்து அந்த நடவடிக்கைகள் ஆராய்வதாக அது குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் தைவானிய அரசாங்கம் உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.
சீனா தைவானிய அதிபர் லாய் சிங்-டேயுடன் பேச்சு நடத்த மறுக்கிறது. தைவான் சீனாவின் ஓர் அங்கம் என்று பெய்ஜிங் கூறுவதை அதிபர் லாய் நிராகரிக்கிறார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் முடிவடைந்த பிறகும் சீனச் சுற்றுப்பயணிகள் தைவான் செல்லும் போக்கு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாததற்கு இருதரப்பும் ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தைவானில் உள்ள அமெரிக்க அரசதந்திர உயரதிகாரி, சீனா தைவான்மீதான ராணுவ நெருக்குதலையும் அச்சுறுத்தல்களையும் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தைவானியத் தலைவர்களுடன் சீனா பேச்சு நடத்தவேண்டும் என்று வலியுறுத்திய திரு ரேமண்ட் கிரீன், தவறான புரிதல்களைத் தவிர்க்கவும் உறவுகளை நிலைப்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் உதவும் என்றார்.

