சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கைக் கீழ்நோக்கித் திருத்தியுள்ளது

சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கைக் கீழ்நோக்கித் திருத்தியுள்ளது

2 mins read
e44db1cb-b426-497a-bccd-823069ce7443
குறைக்கப்பட்ட தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு, பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புகளோடு ஒத்துப்போகிறது. - படம்: இபிஏ

பெய்ஜிங்: சீனா இவ்வாண்டுக்கான அதன் பொருளியல் வளர்ச்சி இலக்கை நாலறை முதல் 5 விழுக்காடுவரை குறைத்துள்ளது.

மூவாண்டுகளில் முதன்முறையாக அதன் பொருளியல் வளர்ச்சிக்கான இலக்கு குறைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரசின் தொடக்கக் கூட்டத்தில், பிரதமர் லி சியாங் வெளியிட்ட வருடாந்தர அரசாங்கப் பணி அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளியலை நிலைப்படுத்துவதற்குத் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளபோதும், கீழ்நோக்கித் திருத்தப்பட்ட அந்த இலக்கு, நீண்டகாலக் கட்டமைப்பு சார்ந்த தடைகள் இருப்பதற்கான அறிகுறி என்று கூறப்படுகிறது.

சீனா எதிர்நோக்கும் உள்நாட்டு, வெளிப்புறச் சவால்களை தமது அறிக்கையில் குறிப்பிட்டார் திரு லி. இருப்பினும், சீனப் பொருளியலின் எதிர்காலக் கணிப்பு குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே, சீனா இவ்வாண்டு தற்காப்புக்காகக் கூடுதலாக 7 விழுக்காடு செலவழிக்கவிருக்கிறது.

சீனா அதன் ராணுவத்தை நவீனமயமாக்கத் திட்டமிட்டுவருகிறது. கடந்த ஐந்தாண்டுகளிலும், அதே போன்ற அதிகரிப்புகள் பதிவாயின.

சீனாவின் 2026 தற்காப்புக்கான அதிகாரபூர்வ வரவுசெலவுத் திட்டத்தி மதிப்பு 1.909 டிரில்லியன் யுவான் (S$352 பில்லியன்) என்று சீன அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘டூ செஷன்ஸ்’ (Two Sessions) எனும் நாட்டின் ஆகப் பெரிய அரசியல் நிகழ்வின் ஒரு பகுதியாக, சீனாவின் முன்னணித் தலைவர்கள் இந்த வாரம் பெய்ஜிங்கில் சந்திக்கின்றனர்.

சீன ராணுவ வலிமைக்கும் இந்த வட்டாரத்தில் உள்ள மற்ற நாடுகளின் ராணுவ வலிமைக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டின் தற்காப்புக்கான வரவுசெலவு அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சீனா 2050ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம் வாய்ந்த படையைக் கொண்டிருக்க நோக்கம் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்