தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததை அனுசரிக்க அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

சீனா நடத்தவிருக்கும் ஆகப் பெரிய அணிவகுப்பு

2 mins read
546190aa-512a-4748-aa05-c9bf85eb73e4
செப்டம்பர் 3ஆம் தேதி சீனா நடத்தவிருக்கும் அணிவகுப்பில் பொதுமக்கள் இதுவரை பார்த்திராத ராணுவ ஆயுதங்களைக் காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுசரிக்க சீனா மாபெரும் ராணுவ அணிவகுப்பை செப்டம்பர் மாதம் நடத்தவிருக்கிறது.

பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் அந்த அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கவிருக்கின்றனர்.

பொதுமக்கள் இதுவரை பார்த்திராத போர் ஆயுதங்கள் உட்பட நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், குண்டுகளை வீசும் விமானங்கள், தரைப் படைக் கருவிகள் ஆகியவை அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் என்று ராணுவ அதிகாரிகள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் அணிவகுப்பு, 1945ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் சரணடைந்ததை அனுசரிக்க 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் ஆகப் பெரிய பேரணி. அது சீன ராணுவத்தின் படைபலத்தை அண்டை நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

ஆளில்லா வானூர்திகளைத் தகர்க்கும் கருவிகள் கொண்ட போர் வாகனங்கள், புதிய கவச வாகனங்கள் என சீனா புதிய ஆயுதங்களையும் ராணுவக் கருவிகளையும் அணிவகுப்பின்போது சீனா வெளிப்படுத்தும் என்று ராணுவ, பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.

“தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் உருமாறிவரும் போர் நடைமுறைகளுக்கு ஏற்ப மாறவும் எதிர்காலப் போரில் வெற்றிப்பெறவும் கொண்டுள்ள ஆற்றலைக் காண்பிக்க சீனா அதன் ஆயுதங்களையும் கருவிகளையும் முழுவீச்சில் காட்சிப்படுத்தும்,” என்றார் ராணுவ அணிவகுப்பின் துணை இயக்குநர் திரு வூ செக்கி.

தியானன்மென் சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் 70 நிமிட நீள ‘வெற்றித் தின’ அணிவகுப்பில் வீரர்களைக் கொண்ட 45 படைகள் பங்கேற்கவிருக்கின்றன. வெளிநாட்டுத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் அதிபர் ஸி ஜின்பிங் அணிவகுப்பைப் பார்வையிடுவார்.

ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் அனுசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

இரண்டாம் உலகப் போர் நிறைவை அனுசரிக்கக் கடந்த முறை நடைபெற்ற நிகழ்ச்சியில் 12,000க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர். அவர்களில் ர‌ஷ்யா, பெலருஸ், மொங்கோலியா, கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களும் கலந்துகொண்டனர்.

பெய்ஜிங் அப்போது 500க்கும் அதிகமான போர்க் கருவிகளையும் 200க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் அணிவகுப்பில் ஈடுபடுத்தியது.

குறிப்புச் சொற்கள்