$420 மில்லியன் ஊழல்: சீனாவில் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை

$420 மில்லியன் ஊழல்: சீனாவில் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை

1 mins read
0c3f1026-60e1-4f47-b00c-40b6c9ff4965
நிதி, பொறியியல் துறைகளில் குத்தகைகள் பெறுவதற்கு யாங் யூலின் தமது பதவியைப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. - படம்: பிபிசி

பெய்ஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நீதிமன்றம் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட சீன அதிகாரி ஒருவருக்கு திங்கட்கிழமை (ஜூலை 6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாங் யூ லின் என்ற அந்த அதிகாரி, கடந்த 30 ஆண்டுகளாக அவரது பதவியைப் பயன்படுத்தி, பலருக்குப் பொறியியல், நிதித் துறைகளில் குத்தகைகள் பெற உதவியுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கென அவர் S$420 மில்லியன் (US$325 மில்லியன்) லஞ்சமாகப் பெற்றார் எனவும் விசாரணையில் தெரியவந்தது.

1993 முதல் 2023ஆம் ஆண்டு வரையில் நன்யாங் நகரில் பல பதவிகளை அவர் வகித்துள்ளார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கையாடல், மோசடி என பல குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.

சீனாவில் அண்மையில் நடந்துள்ள ஊழல் வழக்குகளில் மிக அதிக மதிப்புள்ள தொகை சம்பந்தப்பட்டதாக இது அமைந்துள்ளது.

69 வயதான யாங், பொறியியல் பணிகள் உட்பட, நிலப் பட்டா பரிமாற்றம், நிதிச் சேவை போன்றவற்றை ரொக்கத்தையும் மதிப்புமிக்க பொருள்களையும் பெற்றுக்கொண்டு தமது பதவியைப் பயன்படுத்திச் செய்துள்ளார்.

ராணுவம், அரசாங்க உயர் பதவி வகிப்போர், முக்கிய துறைகள் என சீன அதிபர் ஸி ஜின்பிங் ஊழலுக்கு எதிராக எடுத்துவரும் கடுமையான நடவடிக்கையின் அங்கமாக இந்த விசாரணை நடைபெற்றது.

நான்ஜிங் மாவட்டத்தில் பொருளியல், தொழில்நுட்ப மேம்பாடுகளில் தமது அரசாங்கப் பதவிக்காலத்தில் பல நாள்கள் யாங் பணியாற்றியவர். நாட்டுக்கும் மக்களுக்கும் கடும் இழப்பை அவர் ஏற்படுத்திவிட்டதாக நீதிமன்றம் குற்றப் பத்திரிகையில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்