தேவையில்லாத பதற்றத்தைச் சீனா தூண்டுகிறது: அமெரிக்கா

2 mins read
5211ba6c-8c27-4b4e-9fb5-bf9469436a81
தைவானைச் சுற்றி ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து கடற்பகுதிகளிலும் ஆகாயத்தளங்களிலும் சீனா ராணுவப் பயிற்சிகளை நடத்தியது. - படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: தைவானைச் சுற்றிய சீனாவின் போர் நடவடிக்கைகள் தேவையில்லாத பதற்றத்தை வட்டாரத்தில் தூண்டுவதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது. சீனா ராணுவம் மூலம் நெருக்கடி தருவதை நிறுத்திக்கொள்ளும்படியும் அமைச்சு சொன்னது.

“ராணுவம் மூலம் தைவானுக்கு நெருக்குதல் அளிப்பதைச் சீனா நிறுத்தி அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை நடத்தவேண்டும்,” என்று தற்காப்பு அமைச்சு பேச்சாளர் டோமி பிகட் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 29, 30ஆம் தேதிகளில் தைவானின் முக்கிய தீவைச் சுற்றி சீனா ஏவுகணைகளைப் பாய்ச்சியதோடு போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், கடலோரக் காவற்படைப் படகுகள் ஆகியவற்றை அனுப்பியது.

அத்தகைய ராணுவ நடவடிக்கைகள் சினத்தைத் தூண்டுவதாகக் கூறி தைவான் கடுமையாகச் சாடியது.

தைவான் தனக்குச் சொந்தம் என்று உரிமை பாராட்டும் சீனா வல்லந்தமாக அதைக் கட்டுக்குள் கொண்டுவரப்போவதாக மிரட்டிவருகிறது.

தைவான் நீரிணையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஆதரிக்கும் அமெரிக்கா, வழக்கத்திற்கு மாறான நடைமுறைகளுடன் வன்முறையையும் வற்புறுத்தலையும் எதிர்ப்பதாகத் திரு பிகட் சொன்னார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த மாதம் 29ஆம் தேதி சீனாவின் ராணுவ நடவடிக்கைகளைப் பெரியளவில் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் தமக்கு நல்ல உறவு இருப்பதாகக் குறிப்பிட்ட திரு டிரம்ப், தைவான் ஆக்கிரமிப்பு குறித்து தம்மிடம் எதுவும் சொல்லவில்லை என்றார்.

“சீனா அந்த வட்டாரத்தில் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கடற்படைப் பயிற்சிகளை நடத்திவருகிறது. இப்போது மக்கள் அதைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். திரு ஸி, தைவானை ஆக்கிரமிக்கத் திட்டமிடுகிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை,” என்றார் திரு டிரம்ப்.

தைவானுக்கு $11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்புத் திட்டத்துக்குத் திரு டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கின.

2022ஆம் ஆண்டிலிருந்து தைவானுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் ஆறாவது ராணுவ நடவடிக்கை இது.

குறிப்புச் சொற்கள்