பெய்ஜிங்: சீனா, பொருளியல் வளர்ச்சிக்கு புத்துயிரூட்டுவதற்காக, கடன் கணிசமான அளவுக்கு அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மானியம், சொத்துச் சந்தைக்கு ஆதரவு ஆகியவற்றுடன் வங்கிகளின் மூலதனத்தை நிரப்பவும் அரசாங்கக் கடன் வழங்குதல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று அக்டோபர் 12ஆம் தேதி சீனா கூறியது.
நிதியளித்து பொருளியலுக்கு உந்துதல் தரும் நடவடிக்கை எந்த அளவுக்கு இருக்கும் என்ற விவரத்தை சீன அரசாங்கம் வெளியிடவில்லை.
ஆனால் 2024ஆம் ஆண்டில் பொருளியலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அதிகம் இருக்கும் என்று நிதி அமைச்சர் லான் ஃபோஅன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடன் வழங்குவதற்கு இன்னும் பெரிய அளவில் இடம் உள்ளது என்றார் அவர்.
மாணவர் உதவிகள் இரட்டிப்பு
அக்டோபர் 12ஆம் தேதி சீனாவின் நிதி அமைச்சு பல்வேறு கொள்கை மாற்றங்களை அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான உபகாரச் சம்பளம் இரண்டு மடங்கு அதிகரிக்கப்படுகிறது. நிதி உதவியும் மேம்படுத்தப்படுகிறது.
நாட்டின் இளங்கலை மாணவர்களுக்கான வருடாந்திர உதவித்தொகை ஒதுக்கீடு 120,000க்கும் முதுநிலை பட்டதாரிகளுக்கு 70,000க்கும், முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 20,000க்கும் இரட்டிப்பாக்கப்படும் என்று துணை நிதி அமைச்சர் குவோ டிங்டிங் செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு ஏற்ப மாணவர் கடன் வரம்பு உயர்த்தப்படும். 2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இளையர்களின் வேலையின்மை அதிகரித்ததால் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொருளியல் எதிர்காலம் இருண்டு இருப்பதால் பல கல்லூரி மாணவர்கள் மேல் படிப்புக்காக கல்வி வளாகத்திலேயே தங்கிவிடுகின்றனர்.
உலகின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் நாடான சீனா, சொத்துச் சந்தையின் வீழ்ச்சி, பயனீட்டாளர்களின் பலவீனமான நம்பிக்கை போன்றவற்றால் பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்குகிறது.
உலகளாவிய வர்த்தகத்தில் நிலவும் பதற்றத்தில் ஏற்றுமதியை அதிகம் சார்ந்திருப்பதும் அதற்கு முக்கிய காரணம்.
அண்மைய மாதங்களில் பரவலான பொருளியல் கணிப்புகள் தவறிவிட்டன. 2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் ஐந்து விழுக்காடு பொருளியல் வளர்ச்சி இலக்கும் கேள்விக்குரியதாக இருப்பதால் முதலீட்டாளர்கள், பொருளியல் நிபுணர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத்துக்கான தரவுகள் வரும் வாரங்களில் வெளியிடப்படவிருக்கிறது. பொருளியல் மேலும் பலவீனப்பட்டிருப்பதை அது காட்டலாம். ஆனால் 2024ஆம் ஆண்டின் பொருளியல் இலக்கில் சீன அதிகாரிகள் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

