சீனாவில் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க புதிய கொள்கை

சீனாவில் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க புதிய கொள்கை

1 mins read
c0078f26-8966-4c7a-9140-7aba55b398b3
மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்ட பாரம்பரிய மனப்பான்மையிலிருந்து விலகி, மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் கல்விக் கொள்கையில் சீன அரசு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. - படம்: பிக்சாபே

பெய்ஜிங்: மாணவர்களின் உடல், மனநலத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களைச் சீனாவின் கல்வி அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு அதிகப்படியான வீட்டுப்பாடங்கள் வழங்குவதைத் தடைசெய்வது, அவர்களின் ஓய்வு நேரத்தில் வகுப்பு நடத்துவதைத் தவிர்ப்பது போன்ற முக்கிய நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

பள்ளிகள் அடிக்கடி தேர்வுகளை நடத்துவதற்கும் மாணவர்கள்மீது கல்விச் சுமையை அதிகரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சீனக் கல்வி அமைச்சின்அதிகாரபூர்வ வீசாட் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்டு கடுமையாகப் படிக்க வேண்டும் என்ற பாரம்பரிய மனப்பான்மையிலிருந்து விலகி, மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படியான வீட்டுப்பாடச் சுமை பொதுவான ஒன்றாக உள்ளது; இது மாணவர்களிடையே தூக்கமின்மை, அதிகப்படியான மனக்கவலை, மனச்சோர்வு ஆகியவை ஏற்படக் காரணமாய் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்களின் அளவைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தொடக்க, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு பள்ளி நாளிலும் குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சீனா கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

தொடக்கப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகளை மழலையர் பள்ளிகள் கடைப்பிடிக்கவோ தொடக்கநிலைப் பள்ளிப் பாடத்திட்டங்களை முன்கூட்டியே கற்பிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டதாக அதில் விவரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்