லக்சம்பர்க் சிட்டி: உக்ரேன் போரில் போரிடுவதற்காக ரஷ்ய ராணுவத்தினருக்குச் சீனா ரகசியப் பயிற்சி அளித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரபூர்வமாகக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அதனைத் தற்போது உறுதிப்படுத்தியும் உள்ளது.
லக்சம்பர்க்கில் திங்கட்கிழமை (ஜூன் 15) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு, அதன் உயர் பிரதிநிதி காஜா காலாஸ் இத்தகவலைத் தெரிவித்தார்.
“ரஷ்ய வீரர்களுக்குச் சீன ராணுவம் ரகசியப் பயிற்சி அளிப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் விளைவுகள் குறித்து நாங்கள் உன்னிப்பாக மதிப்பீடு செய்து வருகிறோம்,” என்றார் அவர்.
இதனால் சீனாமீது கடும் பொருளியல், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகிறது.
முன்னதாக, 2025 பிற்பகுதியில் ஏறக்குறைய 200 ரஷ்ய வீரர்களுக்குச் சீனா தனது நாட்டில் ஆளில்லா வானூர்திகளை (ட்ரோன்கள்) இயக்குவது குறித்த ரகசியப் பயிற்சிகளை வழங்கியதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சீனா மறுத்துள்ளது.
உக்ரேன் போரில் ரஷ்யாவிற்குச் சீனா பொருளியல், தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதால், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின்கீழ் ஜூன் 15 அன்று சீனாவைச் சேர்ந்த இரண்டு உற்பத்தி நிறுவனங்கள், ஹாங்காங்கைச் சேர்ந்த இரண்டு கப்பல் நிறுவனங்கள்மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை
சீனாவின் இத்தகைய செயல்பாடுகள், இருதரப்பு வர்த்தகச் சமநிலையின்மை குறித்து விவாதிக்க ஜூன் 17ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அவசரமாகக் கூடவுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, இந்த மாத இறுதியில் சீன வர்த்தக அமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பிரஸ்ஸல்சில் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

