சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல், வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணை மிரட்டல்களைக் கட்டுப்படுத்துவதில் சீனா ‘பொறுப்புடன்’ பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சீனப் பிரதமர் லி சியாங்கைச் சென்ற வாரம் சந்தித்தபோது அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
பெய்ஜிங்கிற்கும் சோலுக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்படுத்தும் அம்சமாக வடகொரியா இருக்கக்கூடாது என்று கூறிய அதிபர் யூன், பியோங்யாங் தென்கொரியாவுக்கு மிரட்டலாக இருந்துவருவதைச் சுட்டினார்.
“வடகொரிய விவகாரம் தீவிரமடைந்துவரும் நிலையில், தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் முத்தரப்பு உறவை வலுப்படுத்த முனைந்துள்ளன என்பதை எடுத்துரைத்தேன். சீனாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராவது தொடர்பிலும் சீனா பொறுப்புடன் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்,” என்று அதிபர் யூன் தெரிவித்தார்.
ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்புச் சந்திப்பை மீண்டும் தொடங்குவதற்கு இரு தலைவர்களும் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.