பெய்ஜிங்: நிலப்பகுதிகளுக்கு நேரடியாகக் கடல் வழியை வழங்கும் முக்கிய கால்வாயைச் சீனா புதன்கிழமை (செப்டம்பர் 16) திறந்துள்ளது.
அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தச் சீனா இலக்கு கொண்டுள்ள நிலையில், இது போக்குவரத்து நேரத்தையும் செலவுகளையும் குறைக்கும்.
நான்கு ஆண்டுகளாகக் கட்டப்பட்ட 134 கிலோமீட்டர் நீளமுள்ள பிங்லு கால்வாய், உற்பத்தி மையமான குவாங்சியின் நானிங்கை டோன்கின் வளைகுடாவுடன் இணைக்கும்.
டோன்கின் வளைகுடா சீனா, வியட்னாமால் சூழப்பட்டப் பகுதி.
முன்பு தென்மேற்கு சீனாவிலிருந்து செல்லும் பொருள்களை கடல் வழியாக அனுப்புவதற்கு குவாங்சோவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது திறக்கப்பட்ட புதிய கால்வாய் இந்தப் பயணத்தை 560 கிலோ மீட்டருக்கு மேலாகக் குறைக்கும்
மேலும் இக்கால்வாயால் போக்குவரத்துச் செலவுகள் 18 முதல் 30 விழுக்காடு வரை குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டுக்கு 745 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.
கால்வாய் வழியாகச் சென்ற முதல் சரக்குக் கப்பலின் காட்சியையும், அதன் அமைதியான நீரில் கப்பல்கள் செல்லும் வான்வழி காணொளியையும் சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி (CCTV) ஒளிபரப்பியது.
மேலும், அந்த நீர்வழித்தடத்தை “நமது நூற்றாண்டின் திட்டம்” என்று அது வர்ணித்தது.
தென்கிழக்கு ஆசியாவிற்கான மிகக் குறுகிய, மிகவும் சிக்கனமான மற்றும் மிகவும் வசதியான வழியை இக்கால்வாய் உருவாக்கியுள்ளதால் அது பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் சின்ஹுவா ஊடகம் குறிப்பிட்டது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வளமான பகுதிகளை விடக் குறைவான போக்குவரத்து வசதிகளைக் கொண்ட சிச்சுவான், சோங்கிங் (Chongqing), யுனான் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளுக்கு இந்தப் புதிய பாதை மிகவும் முக்கியமானது.
இதன்மூலம் நிலக்கரி, தாது, தானியங்கள், ரசாயனங்கள், விவசாயப் பொருள்கள் மற்றும் பிற பொருள்கள் இப்போது வெளிநாட்டுச் சந்தைகளை எளிதாகச் சென்றடைய முடியும்.
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கால்வாய் திட்டத்திற்கு மொத்தம் 13.79 பில்லியன் வெள்ளி செலவானது.
