இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சீன நாட்டவர்களுக்கு எதிராக இவ்வாண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்குவா மாநிலத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து பொறியாளர்கள் மாண்டனர்.
அக்டோபர் மாதத்தில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
அத்தாக்குதலில் பத்துப் பேர் காயமடைந்தனர்.
தாக்குதலுக்குப் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுக்கொண்டது.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு சீனா-பாகிஸ்தான் பொருளியல் வழித்தடத் திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை பாகிஸ்தானில் சீனாவைச் சேர்ந்த 21 ஊழியர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள சீன நாட்டவர்கள் மீது ஆறு மாதங்களில் இருமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சீன அரசாங்கம் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளதாக பாகிஸ்தானியத் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான்- சீனா ஆய்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் ஜியாங் சாய்டோங் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சீனா வெளிப்படையாக அதிருப்தி தெரிவிப்பது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர், “மற்ற நாடுகளில் லாபம் ஈட்டும் வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் அங்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் இருந்தால் சீனா, அதன் நாட்டவர்களை அங்கு அனுப்பிவைப்பதில்லை. ஆனால், பாகிஸ்தான் மட்டும் இதற்கு விதிவிலக்கு என்று சீன அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்,” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் எழுந்து நின்று மறுப்பு தெரிவித்தார் திரு ஜியாங்.
“சீன நாட்டவர்களின் பாதுகாப்புக்கு அதிபர் ஸி ஜின்பிங் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்,” என்று அவர் தெரிவித்தார்.
அண்மையில் அதிபர் ஸி, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டபோது இதை வலியுறுத்தியதாக திரு ஜியாங் நினைவூட்டினார்.
பாகிஸ்தானில் சீன நாட்டவர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்க்கப்படுவதால் பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து சீனா மறுபரிசீலனை செய்து வருவதாக அவர் கூறினார்.
பாகிஸ்தானில் சீன நாட்டவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நிகழாதபடி பாகிஸ்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று திரு ஜியாங் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின்போது சீனத் தூதர் நடந்துகொண்ட விதம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ் ஸாரா பலுச் அக்டோபர் 31ஆம் தேதியன்று தெரிவித்தார்.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாகவே வலுவான நட்புறவு இருந்து வருவதாகவும் ஆனால் திரு ஜியாங் நடந்துகொண்ட விதம் அதற்கு நேர்மாறாக இருந்ததாகவும் அவர் கூறினார்.