டொரோன்டோ: போதைப்பொருள் குற்றம் தொடர்பாக கனடியரான ராபர்ட் லாய்ட் ஸ்கேலன்பர்க்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சீனா ரத்து செய்திருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கனடிய அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 6) தெரிவித்தார்.
சீனாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த கனடியப் பிரதமர் மார்க் கார்னி முயன்று வரும் வேளையில், சீனா நட்பு கரம் நீட்டியிருப்பதாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்றார் அவர்.
2014ஆம் ஆண்டில் ஸ்கேலன்பர்க் மீது சீனாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு அவர் அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
அதையடுத்து, 2018ஆம் ஆண்டில் ஹுவாவெய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வேன்கூவரில் கைது செய்யப்பட்டதை அடுத்து கனடா-சீனா உறவு கசந்தது.
இதற்குப் பதிலடியாக மைக்கல் ஸ்பாவோர், மைக்கல் கொவ்ரிக் ஆகிய இரண்டு கனடியர்களைச் சீனா கைது செய்தது. அவர்கள் இருவரும் சீனாவுக்கு எதிரான வேவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்கேலன்பர்க் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட்டது. போதைப்பொருள் கடத்தலுக்காக அவருக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனை மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது ஸ்கேலன்பர்க்கிற்கு 36 வயது.
தாம் குற்றம் புரியவில்லை என்று வழக்கு விசாரணையின் தொடக்கத்திலிருந்தே ஸ்கேலன்பர்க் தெரிவித்து வந்தார். தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

