வாஷிங்டன்: சீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருளான டீப்சீக் (DeepSeek) அறிமுகம் திங்கட்கிழமை (ஜனவரி 27) அமெரிக்க பங்குகளை விற்கத் தூண்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற முதல் வாரத்தைக் குறிவைத்து அது அறிமுகம் கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறினர்.
இதன் அறிமுகம், குறைகடத்திக்கான சில்லு தயாரிக்கும் அமெரிக்காவின் ‘என்விடியா’ நிறுவனப் மதிப்பை சில மணி நேரங்களில் 600 பில்லியன் அமெரிக்க டாலர் (812 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) குறைத்தது.
இது குறித்துப் பேசிய உத்திபூர்வ, அனைத்துலக ஆய்வுகளுக்கான வாத்வானி ஏஐ மையத்தின் இயக்குநர் டாக்டர் கிரிகோரி ஆலன், “இது தற்செயலான நிகழ்வு அல்ல,” என்றார்.
டீப்சீக் அதன் எல்லாரும் இலவசமாக அணுகக்கூடிய ‘டீப்சீக்-ஆர்1’ பதிப்பை டிரம்ப் பதவியேற்ற ஜனவரி 20ஆம் தேதி வெளியிட்டது.
இது அமெரிக்காவிலும் மேலும் 51 நாடுகளிலும் மிக அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவசச் செயலியாக வேகமாக உருவெடுத்துள்ளது. இதன் மொத்த பதிவிறக்கத்தில் சீனா 23 விழுக்காட்டையும், தொடர்ந்து அமெரிக்கா 15 விழுக்காட்டையும் கொண்டுள்ளது.
‘ஓப்பன்ஐ’ இன் ChatGPT O1க்கு இணையான அல்லது அதை மிஞ்சும் என்று கூறப்படும் டீப்சீக், அமெரிக்க ஏஐ நிறுவனங்களான மெட்டா, ஆல்பபெட் உள்ளிட்டவை தங்களது வன்பொருளை மேம்படுத்துவதற்காக ‘என்விடியா’ சில்லில் செலவிட்ட பில்லியன் கணக்கான பணத்தில் மிகச் சிறு தொகையில் இயங்குகிறது.
அமெரிக்க நிறுவனங்கள் புத்தாக்கம் பெற சீனாவின் செயற்கை நுண்ணறிவு ஒரு தூண்டுதலாக செயல்படக்கூடும் என்று திரு டிரம்ப் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு சீன நிறுவனத்திலிருந்து டீப்சீக் வெளியிடப்பட்டிருப்பது அமெரிக்கத் தொழில்துறைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். போட்டியில் வெற்றிபெற துல்லியமாகக் கவனம் செலுத்த வேண்டும்” என்று திரு டிரம்ப் மியாமியில் நடந்த குடியரசுக் கட்சிக் கூட்டத்தில் கூறினார்.
“அது நேர்மறையாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
“பில்லியன் கணக்கில் செலவழிப்பதற்குப் பதிலாக, குறைவாகச் செலவு செய்யப்போகிறீர்கள். மேலும் நம்பிக்கையுடன் அத்தகைய ஒரு தீர்வைக் கண்டறியலாம்,” என்றார் அவர்.
மேம்பட்ட சில்லுகள், குறைகடத்தி உற்பத்தி உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களை சீனா ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது பயனற்றது என்று அமெரிக்கர்களை உணரச்செய்வதற்கு இது தகுந்த நேரம் என்று முன்னாள் பென்டகன் அதிகாரி டாக்டர் ஆலன் கூறினார்.
திரு டிரம்பின் முதல் தவணையின்போது கொண்டுவரப்பட்டு, பைடன் நிர்வாகத்தின்போது தீவிரப்படுத்தப்பட்ட சீனா மீதான ஏற்றுமதித் தடைகள் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் போட்டியிடும் சீனாவின் திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.