தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்தோருக்கு உதவ சமூகப் பாதுகாப்பு நிதியை அதிகரிக்கும் சீனா

2 mins read
093a7be8-4458-420c-b9ea-7edd70701bcd
அடுத்த பத்தாண்டுகளில் சீனாவில் ஏறக்குறைய 300 மில்லியன் பேர் ஓய்வு பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: சீனா அதன் சமூகப் பாதுகாப்பு நிதியை அதிகரிக்கத் திட்டமிடுகிறது.

விரைந்து மூப்படையும் சமூகத்திற்கு உதவுவது நோக்கம்.

2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியில் தற்போது 2.88 டிரில்லியன் யுவான் (S$528 பில்லியன்) உள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதமும் ஊழியரணியில் இளையர்களின் எண்ணிக்கையும் சுருங்கும் நிலையில், முதியோர்களுக்கான ஆதரவு குறைவதால், அந்த நிதிக்குக் கூடுதலாகப் பணம் ஒதுக்கச் சீனா முடிவெடுத்துள்ளது.

முதியோர் பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு இந்த நிதி உதவும் என்று கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான ஸ்டடி டைம்சில் ஆகஸ்ட் 19ஆம் தேதி, அந்த நிதிக்கான கட்சிச் செயலாளர் டிங் சூடோங் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய 300 மில்லியன் பேர் ஓய்வு பெறுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு ஈடானது.

2040ஆம் ஆண்டுக்குள் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோரில் பாதிப் பேர் சீனாவில் வசிப்பர் என்று கருதப்படுகிறது.

சீனாவின் ஓய்வூதியக் கட்டமைப்பிடம் 2035ஆம் ஆண்டுக்குள் நிதியே இருக்காது என்று அந்நாட்டு அரசாங்கத்தின் ‘சீன அறிவியல் கழகம்’ கூறுகிறது.

இந்நிலையில், தேசிய சமூகப் பாதுகாப்பு நிதி ஓய்வூதிய நிதி முதலீடுகளை விரிவுபடுத்தும் என்று திரு டிங் கூறினார்.

உள்நாட்டுச் சந்தையில் முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்றும் அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளான அறிவியல், தொழில்நுட்பப் புத்தாக்கம், புதிய தரத்திலான உற்பத்தி ஆகிய அம்சங்களில் அதிக முதலீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்