2035க்குள் 400 மில்லியன் மூத்தோரைப் பராமரிக்கச் சீனா திட்டம்

2035க்குள் 400 மில்லியன் மூத்தோரைப் பராமரிக்கச் சீனா திட்டம்

2 mins read
bcf8a5a1-80b7-4df2-9474-109408d7549b
ஷண்டோங் மாநிலத்தின் ஜினான் பகுதியில் உள்ள ‘சிண்டோரா லிவிங்’ மூத்தோர் தங்கும் வசதியில் குடியிருப்பாளர்களும் ஊழியர்களும். - படம்: கெப்பல்
multi-img1 of 2

ஜினான், ஷண்டோங்: சீனாவில் அறுபது வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2035ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியனை எட்டும் என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

அது, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளின் மொத்த மக்கள்தொகைக்குச் சமம்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அரசாங்க ஆய்வு ஒன்றில், 35 மில்லியன் சீன மூத்தோர் தங்களைச் சொந்தமாகக் கவனித்துக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியதாகத் தெரியவந்தது. 2010ஆம் ஆண்டில் 40 மில்லியனாக இருந்த அந்த எண்ணிக்கையைக் காட்டிலும், அது குறைவு.

2035ஆம் ஆண்டுக்குள், அந்த எண்ணிக்கை 46 மில்லியனுக்கு உயரும் என்றும் 2050ஆம் ஆண்டுக்குள் அது 58 மில்லியனைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

இன்று, குறிப்பாக, கொவிட் கிருமிப்பரவலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், அமைப்பு ரீதியான பராமரிப்பு மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவில் 722,000 பேரைப் பணியில் அமர்த்திய 41,700 மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் இருந்ததாக சிவில் விவகார அமைச்சு கூறியது. 2019ல், அந்த எண்ணிக்கை 34,000ஆக இருந்தது.

தேவைகளைப் பூர்த்திசெய்ய, ஷண்டோங்கில் மூத்தோர் பராமரிப்புத் தொழில்துறைப் பிரிவை 2027ஆம் ஆண்டுக்குள் அமைக்கத் திட்டம் உள்ளது. அதன் மதிப்பு 100 பில்லியன் யுவானுக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

மூத்தோர் பராமரிப்பு ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும் தேவையான புதிய வசதிகளுக்கும் ஊக்கத் தொகைகளுக்கும் ஷண்டோங் நிதியுதவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அத்தகைய நிதியுதவிகள் ‘சிண்டோரா லிவிங்’ போன்ற நிலையங்களை ஈர்த்துள்ளது. சிங்கப்பூரின் கெப்பல் நிறுவனத்தின் துணை நிறுவனமான அது, சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள ‘பெரனியல் ஹோல்டிங்ஸ்’ எனும் மற்றொரு நிறுவனத்தின் பாதையைப் பின்பற்றுகிறது.

‘பெரனியல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் 2015ஆம் ஆண்டுமுதல் சீனாவின் மருத்துவ, முதியோர்ப் பராமரிப்புத் துறைகளில் 31 பில்லியன் யுவானை முதலீடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்