ஹாங்காங்: சீனா இந்த ஆண்டிறுத்திக்குள் (2025) கடுமையான காற்றுத் தூய்மைக்கேட்டைத் துடைத்தொழிக்கத் திட்டமிடுவதாக சுற்றுப்புறத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சீனாவில், ‘தெளிந்த வானத்துக்கான போராட்டம்’ எனும் நடவடிக்கையின்கீழ், அதிகாரிகள் மாசுக் கட்டுப்பாடு, கரிம வெளியேற்ற குறைப்புத் திட்டங்களை அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், காற்றுத் தரத்துக்கான முன்னுரைப்பும் முன்கூட்டியே எச்சரிப்பதற்கான கட்டமைப்பும் மேம்படுத்தப்படும் என்று காற்று மண்டலத் துறை இயக்குநர் லி தியன்வெய் கூறினார்.
ஓசோன் தூய்மைக்கேடு, காற்றில் நிறைந்திருக்கும் தீங்கிழைக்கக்கூடிய துகள்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் சமாளிப்பதற்கான திட்டமும் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.
“தெளிந்த வானத்துக்கான போராட்டம் இன்னும் அப்படியே இருக்கிறது,” என்று திரு லி கூறியதாக சூழலியல், சுற்றுப்புற அமைச்சின் இணையத்தளத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் சீனாவில் காற்றுத் தூய்மைக்கேடு முக்கியப் பிரச்சினையாக நிலவுவதாகவும் அது பொருளியலையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிப்பதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.
சீனாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் காற்றுத் தூய்மைக்கேட்டால் மாண்டுபோவதாக அது குறிப்பிட்டது.
அவர்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வெளிப்புறக் காற்றுத் தூய்மைக்கேட்டால் மாண்டனர். மற்றவர்கள் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் எரிபொருளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திச் சமைப்பதால் உண்டாகும் காற்றுத் தூய்மைக்கேட்டால் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சீனாவில் காற்றுத்தரம் சென்ற ஆண்டு சற்று மேம்பட்டதாகத் திரு லி கூறினார்.
ஆண்டு அடிப்படையில், காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்த நாள்களின் விகிதம் 1.7 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்து 87.2 விழுக்காடாகப் பதிவானதாகக் கூறப்பட்டது.
சீனா, கரிம வெளியேற்றம் தொடர்பில் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். அவை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று திரு லி வலியுறுத்தினார்.
மேலும், புதியவகை எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களையும் இயந்திரங்களையும் விமான நிலையம், துறைமுகம், தளவாடப் பூங்காக்கள் ஆகியவற்றில் சீனா அதிக அளவில் பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பேரளவிலான சரக்குகளை நீண்ட தொலைவுக்குக் கொண்டுசெல்ல ரயில் அல்லது நீர்வழிப் போக்குவரத்தைப் பயன்படுதும்படி ஊக்குவிக்கச் சீன அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.