வாஷிங்டன்: வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தை 2035ஆம் ஆண்டுக்குள் 7 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடு வரை குறைக்க சீனா திட்டமிடுவதாக அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் கூறியிருக்கிறார். ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் திரு ஸி அதனைத் தெரிவித்தார்.
பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கு எதிராகச் செயல்பட முயலும் சில நாடுகளை அவ்வாறு செய்யவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஏற்றுநடத்தும் பருவநிலை குறித்த தலைவர்களின் உச்சநிலை மாநாட்டில் திரு ஸி பேசினார். பெய்ஜிங்கிலிருந்து காணொளிவழி நேரடியாக அவர் உரையாற்றினார்.
வரும் நவம்பர் மாதம் பிரேசிலில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டிற்கு முன்னர் சீனாவின் தேசியத் திட்டத்தைத் திரு ஸி அறிவித்தார்.
பத்தாண்டுகளுக்குள் காற்றாலை, சூரியப்பலகைகள் மூலம் கிடைக்கக்கூடிய எரிசக்தியை அதிகரிக்கச் சீனா திட்டமிடுவதாக அவர் சொன்னார். 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிசக்தி ஆற்றலை ஆறு மடங்கிற்கும் மேல் உயர்த்துவது நோக்கம்.
உள்நாட்டு எரிசக்திப் பயன்பாட்டில் புதைபடிம எரிபொருள்கள் அல்லாதவற்றின் பங்கு 30 விழுக்காட்டுக்கும் அதிகமாய் இருப்பதை உறுதிசெய்யவும் சீனா எண்ணுகிறது.
அதே நேரம், உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளையும் பருவநிலை சார்ந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று சீன அதிபர் கேட்டுக்கொண்டார். பருவநிலை குறித்த பாரிஸ் உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகியதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், பருவநிலை மாற்றம் என்பது ஏமாற்று வேலை என்று சாடினார். புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தித் தொழில்நுட்பத்துக்கு ஆதரவு தருகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளையும் சீனாவையும் அவர் குறைகூறினார்.
தொடர்புடைய செய்திகள்
உலகில் கரியமிலவாயுவை ஆக அதிக அளவில் வெளியிடும் நாடு அமெரிக்கா. அதற்கு அடுத்த நிலையில் உள்ளது சீனா.