குழந்தை பால்மாவை விரைந்து மீட்குமாறு நெஸ்லேவுக்கு சீனா நெருக்குதல்

2 mins read
5c6dbb95-5157-4d7d-a7bf-663a67bf97da
குழந்தைகளுக்கான பால்மாவு விற்பனையில் உலகின் ஆகப்பெரிய சந்தையைச் சீனா கொண்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: கெட்டுப்போனதாக சந்தேகிக்கப்படும் குழந்தைகளுக்கான பால்மாவைத் திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டுமாறு நெஸ்லே நிர்வாகத்தை சீன அதிகாரிகள் நெருக்கி வருகின்றனர்.

சீனப் பயனீட்டாளர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் நெஸ்லே நிறுவனத்துக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாக சீன அரசாங்கத்தின் சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் வியாழக்கிழமை (ஜனவரி 8) கூறியது.

குழந்தைகளுக்கான பால்மாவு விற்பனையில் உலகின் ஆகப்பெரிய சந்தையை சீனா கொண்டுள்ளது.

சுவிட்சர்லாந்து உணவுப்பொருள் குழுமமான நெஸ்லே, தனது குழந்தை பால்மாவு தயாரிப்புகள் சிலவற்றைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை புதன்கிழமை (ஜனவரி 7) தொடங்கியது.

சில வகை பால்மாவு தயாரிப்புகளில் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தக்கூடிய ‘செருலைட்’ என்னும் நச்சுப்பொருள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அந்தக் குழுமம் அமெரிக்கா, ஐரோப்பா முதல் ஆசியா வரை பெரிய அளிவிலான மீட்பு நடவடிக்கையில் இறங்கியது.

எந்த ஒரு புகாரும் எழுப்பப்படாத நிலையில், அந்தக் குழுமம் தன்னிச்சையாக அந்த உணவுப் பொருள் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

தனது எண்ணெய் விநியோக நிறுவனம் ஒன்றிடமிருந்து பெறப்பட்ட மூலப்பொருளில் ‘செருலைட்’ கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது அந்தச் செயலில் வேகமாக ஈடுபட்டது.

இருப்பினும், உலக அளவில் இதுவரை அந்த பால் மாவு காரணமாக யாருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என நெஸ்லே தனது இணையத்தளத்தில் தெரிவித்தது.

ஏறத்தாழ 50 நாடுகளில் அந்த உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பால்மாவை மீட்பது தொடர்பான அறிவிப்புகளை செய்ய வேண்டியது அந்த அதிகாரிகளின் பொறுப்பு என்றும் நெஸ்லே கூறியுள்ளது.

அதற்கேற்ப ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் உள்ள நெஸ்லே அதிகாரிகள் உடடினடியாக பால் மாவு மீட்பு குறித்து அறிவித்தனர்.

உலகளாவிய பால்மாவு மீட்புக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நெஸ்லே இன்னும் கணக்கிடவில்லை. இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க நிதித் தாக்கத்தைத் தான் எதிர்பார்க்கவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

காரணம், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பால்மாவு வகைகளின் மதிப்பு தனது தயாரிப்புகளின் வருடாந்திர விற்பனையில் வெறும் அரை விழுக்காடுதான் எனவும் நெஸ்லே தெரிவித்துள்ளது.

நெஸ்லே குழுமத்தின் பால்மாவு 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வே தங்களது முன்னுரிமை என்று நெஸ்லே குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்