அமெரிக்கப் பொருள்கள்மீது வரிகளை 84%ஆக உயர்த்துகிறது சீனா

2 mins read
e20a0c8b-bef2-4cbc-a3d0-73762a4a894c
ஷாங்காயில் புதன்கிழமை (ஏப்ரல் 9) காளை மாடு சிற்பத்துக்குப் பக்கத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பெண். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பெய்ஜிங்: அமெரிக்கப் பொருள்கள்மீது வியாழக்கிழமை (ஏப்ரல் 10) முதல், சீனா 84 விழுக்காட்டு வரிவிதிக்கப்போவதாக அந்நாட்டு நிதி அமைச்சு புதன்கிழமை அறிவித்தது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த 34 விழுக்காட்டைவிட இது கணிசமாக அதிகம்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு சீனா பதில் நடவடிக்கையை அறிவித்துள்ளதால், வரிவிதிப்புப் போர் தீவிரமடைந்துள்ளது.

பல நாடுகளின் இறக்குமதிகள்மீது திரு டிரம்ப்பின் பதில் வரிவிதிப்பு புதன்கிழமை நடப்புக்கு வந்தது. குறிப்பிடும்படியாக, சீனப் பொருள்கள்மீது பேரளவாக 104 விழுக்காடு வரிவிதிப்பை அவர் அறிவித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பங்கிற்கு பதில் நடவடிக்கைகளை புதன்கிழமை அறிவிக்கவிருந்தன.

இந்நிலையில், அமெரிக்க இறக்குமதிகள்மீது 84 விழுக்காடு பதில் வரிகளை விதிக்க சீனாவின் நடவடிக்கை துரதிஷ்டவசமானது எனவும் அது சீனாவுக்குப் பின்னடைவைத் தரும் எனவும் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசண்ட் கருத்துரைத்தார்.

ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வொர்க்கிற்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில், “பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வராதது துரதிஷ்டவசமானது என நான் நினைக்கிறேன். அனைத்துலக வர்த்தக முறையில் சீனாவே மிக மோசமான குற்றவாளி,” என்றார்.

சீனாவின் பதில் வரிகளுக்குப் பதிலடி தரும் விதமாக, சீன இறக்குமதிகள்மீது கடந்த வாரம் 54 விழுக்காடாக இருந்த வரிகளை திரு டிரம்ப் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளார்.

சீனாவின் வணிக அமைச்சு வியாழக்கிழமையிலிருந்து தனது ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் 12 அமெரிக்க நிறுவனங்களையும் தனது நம்பகமில்லாத நிறுவனங்கள் பட்டியலில் ஆறு நிறுவனங்களையும் சேர்த்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா உடனான தனது வர்த்தக உபரியைத் தவிர்க்க முடியாதது என்று கூறியிருந்த சீனா, திரு டிரம்ப் சீனப் பொருள்கள்மீது வரிமேல் வரிவிதித்தால் யுத்தத்தைத் தொடர்வதற்கு தன்னிடம் ‘தீர்மானமும் ஆற்றலும்’ இருப்பதாக எச்சரித்திருந்தது.

வரிவிதிப்புப் போர் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான சீன நாணயத்தின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்தது.

இதற்கிடையே, உலகளாவிய வர்த்தகத்தைச் சீர்குலைக்க அமெரிக்காவின் வரிவிதிப்பு அச்சுறுத்துவதாக உலக வர்த்தக அமைப்பிடம் சீனா கூறியுள்ளது.

உலக வர்த்தக அமைப்பிடம் சீனா புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், “நிலவரம் படுமோசம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள உறுப்பு நாடுகளில் ஒன்றாக, இந்தக் கண்மூடித்தனமான நடவடிக்கைக்கு உறுதியான எதிர்ப்பையும் மிகுந்த கவலையையும் சீனா வெளிப்படுத்துகிறது,” என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்