மாஸ்கோ: 2025ஆம் ஆண்டில் ரஷ்யப் படைகளுக்குச் சீனா ரகசிய ராணுவப் பயிற்சி அளித்த விவகாரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் தற்காப்பு அமைச்சரால் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் இதில் இரு நாடுகளையும் சேர்ந்த குறைந்தது நான்கு ஜெனரல்கள் நேரடியாக ஈடுபட்டிருந்ததாகவும் ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கண்டறிந்த ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உக்ரேன் போருடன் தொடர்புடைய இப்பயிற்சி நடவடிக்கைகளில் இரு நாடுகளின் மிக உயரிய ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது, ரஷ்யா மற்றும் சீனா இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் பார்வையிட்ட ரஷ்யாவின் ரகசிய ஆவணங்களின்படி, தற்காப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட உள்நாட்டு ஆணை ஒன்றின் அடிப்படையில், ரஷ்ய ராணுவக் குழுவினர் சீன ராணுவத் தளங்களுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நவம்பர் மாதத்தில் பெய்ஜிங்கில் உள்ள ராணுவத் தளத்தில் கதிரியக்கம், ரசாயனம் மற்றும் உயிரியல் சார்ந்த பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மூன்று வாரங்கள் ரகசியப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சீனா அதிகாரபூர்வமாக உக்ரேன் போரில் நடுநிலை வகிப்பதாகக் கூறி வரும் வேளையில், இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள சீன வெளியுறவு அமைச்சு, தனது நிலைப்பாடு எப்போதுமே மாறாத ஒன்று எனத் தெரிவித்துள்ளது.

