வர்த்தகப் பூசல்களைச் சமாளிக்கும் வகையில் சீனா அதன் வர்த்தகம் சார்ந்த சட்டங்களைத் திருத்தி மாற்றியமைத்துள்ளது. அந்த நடவடிக்கை சனிக்கிழமை (டிசம்பர் 27) இடம்பெற்றது.
சீனாவின் 24.4 டிரில்லியன் வெள்ளி பொருளியலில் ஏற்றுமதி முக்கியமான அங்கமாகும். கனிமங்கள், பொம்மைகள்,ஆடைகள் எனச் சீனா உலக நாடுகள் பலவற்றுக்கு ஏற்றுமதி செய்கிறது.
வெளிநாடுகளுக்கான வர்த்தகச் சட்டங்கள் திருத்தத்திற்குச் சீனாவின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அது 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து நடப்புக்கு வரும் என்றும் ஷின்ஹூவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் பெரும் வர்த்தகப் பங்காளிகளாகத் திகழும் நாடுகளை ஈர்க்கும் விதத்தில் வெளிநாடுகளுக்கான வர்த்தகச் சட்டங்களைப் பெய்ஜிங் மாற்றியமைத்துள்ளது.
உலகின் ஆகப் பெரும் இரண்டாவது பொருளியலாகத் திகழும் சீனாவுக்கு அமெரிக்கா புதிய வரிவிதிப்புகளை அமல்படுத்தி நெருக்கடித் தருகிறது.
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த சீனா அதன் உற்பத்திகளை மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்வதில் தற்போது ஆர்வம் காட்டிவருகிறது.
1994ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தைச் சீனா உருவாக்கியது. அது 2001ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பிறகு மூன்றுமுறை அதைத் திருத்தி மாற்றியுள்ளது.
கடைசியாக 2022ஆம் ஆண்டு சீனா அதன் வர்த்தகச் சட்டங்களைத் திருத்தியது.
தொடர்புடைய செய்திகள்
விரைவில் அமலுக்கு வரும் சட்டத்தில் மின்னிலக்கம் மற்றும் பசுமை வர்த்தகம் சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

